சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பூசி மூலம் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை இருவரையும் பாதுகாக்க முடியும் : டாக்டர் என்.கே. அரோரா

Posted On: 02 JUL 2021 6:33PM by PIB Chennai

கொவிட் தடுப்பூசி மூலம் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை இருவரையும் பாதுகாக்க முடியும் என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், செயற்குழு உறுப்பினர்  டாக்டர் என்.கே. அரோரா கூறியுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், செயற்குழு உறுப்பினர் டாக்டர் என்.கே.அரோரா, டி.டி நியூஸ் செய்திசேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

இரு உயிர்களின் பாதுகாப்பு பற்றிய கேள்வி :

கொவிட்-19 இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு, முதல் அலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை  அதிகரித்தது இந்த முடிவை எடுக்க வழிவகுத்துள்ளது. கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களும் பயன் அடைய வேண்டும் என உணரப்பட்டது.  கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டால், அது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு. அதனால் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட நாடு முடிவெடுத்துள்ளது.

தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு :

தாய்மார்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஒட்டு மொத்த உலகமும் நினைக்கிறது. ஏனென்றால் இது தாயின் உடலில் மட்டும் எதிர்ப்பு சக்தியை உருவாக்காமல், குழந்தைக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. நமது தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கூட, எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த உண்மைகள் மற்றும் எண்ணிக்கைகளை பார்த்துதான், நமது நாட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் கண்காணிக்கப்படுவர். நாட்டில் கொவிட் தடுப்பூசி போடும் அனைத்து கர்ப்பிணி பெண்களும், அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்படுவர். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியும் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கை, தடுப்பூசி போட்டபின் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

கர்ப்பிணி பெண்கள் எப்போது தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ள முடியும்?

கர்ப்பிணி பெண்கள், கர்ப்பம் தரித்தது முதல் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முதல், இரண்டாவது, மூன்றாவது மாதம் என்பது முக்கியம் அல்ல.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732327

*****************



(Release ID: 1732379) Visitor Counter : 2104