குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 01 JUL 2021 8:00PM by PIB Chennai

பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய சங்கம் ஏற்பாடு செய்தகர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி சர்வதேச கூட்டமைப்பின் (IFCPC 2021)    இந்தாண்டு உலக கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க, பன்முக உத்திகளை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, சமுதாய அளவில் சுகாதார பரிசோதனை முகாம்களை நடத்துவதை வழக்கப்படுத்த வேண்டும். புற்றுநோயை தடுத்து, மக்களின் உயிர்களை காக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இந்தியப் பெண்களிடம், காணப்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயாக இடம்பிடித்துள்ளது. இது தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது. ஆரோக்கியமான பெண்கள் வழக்கமான பரிசோதனை மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, உலகளாவிய நோய் சுமைகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒரு விரிவான அணுகுமுறையை நாம் பின்பற்றினால், அதை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையில் இருந்து அகற்ற முடியும்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். இளம்பெண்களுக்கு பாப்பிலோமா வைரஸ்க்கு(எச்பிவி) எதிரான தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க முடியும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மருத்துவ நிபுணர்களை அனுப்பிகர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிவது, எச்பிவி தடுப்பூசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 2020ம் ஆண்டில் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் பேர் இறந்துள்ளனர். 70 சதவீத புற்றுநோய் இறப்புகள், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான சுமை மற்றும் இறப்பு இங்கு அதிகமாக உள்ளது. இது இந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது

பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது. பெரும்பாலானோருக்கு, புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறிப்படுகிறது. இதனால் இதற்கான சிகிச்சை மற்றும் இதில் இருந்து குணமடைவது மிகவும் சவாலாக உள்ளது.

புற்றுநோய் சிகிச்சையின் போது நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பம் உடல்ரீதியாக, மனரீதியாக பாதிப்படைவதோடு, பணரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்ய, பல குடும்பங்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். அதனால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான முழுமையான மருத்துவ காப்பீடு பாதுகாப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.

தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு இடையே, தொற்று அற்ற நோய்கள் அதிகரித்து வருவதையும் புறக்கணிக்க முடியவில்லைஉட்கார்ந்த வாழ்க்கை முறை தவிர, ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாதது, புகையிலை மற்றும் மது பயன்பாடு, அதிக அளவு மாசு ஆகியவையும் தொற்று அற்ற நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த நிலை கவலையளிக்கிறது. தொற்று அற்ற நோய்களால் ஏற்படும் அகால மரணங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை

‘‘உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் அதற்கு அடிபணிய வைக்க வேண்டும்’’ என ஆன்மீக தலைவர் சுவாமி விவேகானந்தர் கூறினார்

இந்த கொரோனா தொற்று சமயத்தில், மருத்துவத் துறையினரின் உயர்ந்த சேவை மிகவும் பாராட்டத்தக்கது. தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவைக்கு, ஒட்டுமொத்த உலகமும் கடன்பட்டுள்ளது.

உலகளாவிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை குறைக்க, கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி சர்வதேச கூட்டமைப்பு (ஐஎப்சிபிசி),  கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய சங்கம் (ஐஎஸ்சிசிபி) ஆகியவற்றின் உறுதி மற்றும் முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

 

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு பேசினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சுனில் குமார், மூத்த மருத்துவர்கள், ஐஎப்சிபிசி நிர்வாகிகள், ஐஎஸ்சிசிபி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காணொலி காட்சியில் பங்கேற்றனர்.

 

 

----(Release ID: 1732029) Visitor Counter : 208