ஜல்சக்தி அமைச்சகம்

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ 5,601 கோடியை அசாமுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUN 2021 2:20PM by PIB Chennai

அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான தண்ணீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ 5,601 கோடியை அசாமுக்கு மத்திய அரசு இந்தாண்டு ஒதுக்கியுள்ளது. 2020-21-ல் இந்த ஒதுக்கீடு  ரூ 1,608.51 கோடியாக இருந்தது. முதல் தவணையாக ரூ 700 கோடியை அம்மாநிலத்திற்கு ஜல் சக்தி அமைச்சகம் வழங்கியுள்ளது.

2024-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்கும் இலக்கை எட்டுவதற்கு அனைத்து உதவியும் வழங்கப்படும் என்று நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.

ஜல் ஜீவன் இயக்கம் 2019 ஆகஸ்ட் 15 அன்று அசாமில் தொடங்கப்பட்ட போது, 25,335 கிராமங்களில் உள்ள 63.35 லட்சம் வீடுகளில் வெறும் 1.11 லட்சம் (1.76 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில், 6.88 லட்சம் வீடுகளுக்கு (10.87 சதவீதம்) குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று வருடங்களில் மிச்சமிருக்கும் 55.35 லட்சம் வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர்  இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த இலக்கை எட்டுவதற்காக, 2021-22-ல் 22.63 லட்சம் வீடுகளுக்கும், 2022-23-ல் 20.84 லட்சம் வீடுகளுக்கும், 2023-24-ல் 13.20 லட்சம் வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்க அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத்திற்கு அசாம் முதல்வர் டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728511

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1728612) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese