சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளில் கொவிட் தடுப்பு மருந்து குறித்து பரவும் தவறான தகவல்களை முறியடிப்பதற்காக மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர்

Posted On: 11 JUN 2021 1:52PM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை முறியடிக்கும் விதமாக, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி மகாராஷ்டிராவின் நந்தர்பார் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்கள் சாதனை படைத்துள்ளன.

மாநிலத்தின் பின்தங்கிய மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியை சேர்ந்த சிந்த் கவ்ஹான், புருஷோத்தம் நகர் மற்றும் சகாலி ஆகிய இந்த கிராமங்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்ததன் மூலம் இச்சாதனையை எட்டியுள்ளன.

கொவிட்-19-ஐ முறியடிப்பதில் முக்கிய பங்காற்றும் தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையை 2021 ஜனவரி 16 அன்று மத்திய அரசு தொடங்கியது. 24.6 கோடி டோஸ் தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டுள்ளன.

மக்கள் தொகை அதிகமுள்ள, பரந்து விரிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்களை தயார் படுத்துவது  மிகவும் கடினமான காரியமாகும்.

நந்தர்பார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பத்தில் தயாராக இல்லை. தடுப்பு மருந்து பெறுபவர்கள் பக்க விளைவுகள் காரணமாக இறந்து விடுவார்கள் என்று பயந்த அவர்கள், சுமார் ஒன்றரை மாதங்களாக ஒத்துழைப்பு தரவில்லை.

அதன் பின்னர், மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

இது குறித்து பேசிய ஜில்லா பரிஷத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரியான சேகர் ரவுடல், “மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர மூத்த தலைவர்கள் இந்த கிராமங்களுக்கு வருகை புரிந்து மக்களிடம் உரையாடினர். பின்னர் தவறான தகவல்களை முறியடிக்கும் ஒலிப்பதிவுகள் பழங்குடியினரின் மொழிகளில் பகிரப்பட்டன,” என்றார்.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அகில இந்திய வானொலி  மற்றும் தூர்தர்ஷன் பிரிவுகள் தடுப்பு மருந்து பற்றி சரியான தகவல்களை தொடர்ந்து வழங்கின.

மகாராஷ்டிரவில் உள்ள 36 மாவட்டங்களில் 16 வேன்கள் மூலம் நடமாடும் கண்காட்சிகளை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், புனே, நடத்தியது. ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர்கள் வரை பயணம் மேற்கொண்ட இந்த வாகனங்கள், 25 பிப்ரவரி முதல் மார்ச் 6, 2021 வரை நந்தர்பார் மாவட்டத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726191

*****************


(Release ID: 1726307) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Hindi , Marathi