பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறையில் 2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள்: மின்னணு-புத்தகத்தை வெளியிட்டார் அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்

Posted On: 07 JUN 2021 5:54PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டில் மேற்கொண்ட  சீர்திருத்தங்களின் மின்னணு-புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சயில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்புத்துறையின் எதிர்காலம் பற்றிய முக்கியமான ஆவணம் இந்த மின்னணு புத்தகம் என குறிப்பிட்டார். ‘‘பாதுகாப்புத்துறையை வலுவாக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசின் தீர்மானத்தை தெரிவிப்பதாக  இந்த மின்னணு புத்தகம் உள்ளது’’ என அவர்  மேலும் கூறினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், வரும் காலங்களில் பாதுகாப்புத்துறையில் இந்தியாவை உலகளாவிய சக்திவாய்ந்த மையமாக மாற்றும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொள்கை மாற்றங்கள், புதுமை, டிஜிட்டல் மாற்றம் போன்றவை மூலம் பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டில் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக இந்த மின்னணு புத்தகம் உள்ளது. ராணுவ தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க, பிரதமரின் தற்சார்பு இந்தியா நடவடிக்கைகளிலும், இந்த சீர்திருத்தங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்கை அதிகரிப்பது, எல்லை கட்டமைப்பை வலுப்படுத்துவது, தொலைதூர பகுதிகளில் தேசிய மாணவர் படைகளை விரிவுபடுத்துவது உட்பட பல சீர்திருத்தங்கள் இந்த மின்னணு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன

இந்த மின்னணு புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் காணலாம்.

https://www.mod.gov.in/news

https://www.mod.gov.in/sites/default/files/MoD2RE7621.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725091

-----



(Release ID: 1725174) Visitor Counter : 220