பாதுகாப்பு அமைச்சகம்

காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவத் தளபதி ஆய்வு

Posted On: 02 JUN 2021 7:28PM by PIB Chennai

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.  

இதற்காக இன்று  ஸ்ரீநகர் சென்ற  ஜெனரல் நரவானே மற்றும் வடக்கு பகுதி கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, சினார் படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர்  காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களை பார்வையிட்டனர்.  காஷ்மீரில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலை அங்கு பணியில் இருக்கும் கமாண்டர்கள் விளக்கினர். தீவிரவாத அமைப்புக்கு உள்ளூர் இளைஞர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவர்களை அடையாளம் காண மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ராணுவ கமாண்டர்கள்  எடுத்து கூறினர்.

தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பதை தடுப்பது, உள்ளூர் தீவிரவாதிகளை சரணடைய செய்வது போன்ற முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய தளபதி ஜெனரல் நரவானே, தீவிரவாத சவால்கள் மற்றும் பெருந்தொற்று சவால்கள் இரண்டையும் எதிர்த்து அயராது போராடும் ராணுவ வீரர்கள் மற்றும் கமாண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 

உருவாகி வரும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள ராணுவத்தினர் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி மற்றும் காஷ்மீரில் நிலவும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து சினார் படைப்பிரிவு கமாண்டர் விளக்கினார்.

அதன்பின் இன்று மாலை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹாவை, ராஜ்பவனில், ராணுவ தளபதி சந்தித்து பேசினார். அப்போது உருவாகி வரும் சவால்கள், ஜம்மு காஷ்மீரில் நீண்ட கால அமைதிக்கான திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.   ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவது மற்றும் கொரோனா  தொற்று நேரத்தில் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உதவுவது போன்றவற்றில் இந்திய ராணுவத்தின் பங்கை துணை நிலை ஆளுநர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723868

*****************



(Release ID: 1723896) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi , Punjabi