எஃகுத்துறை அமைச்சகம்

ஒடிசா மாநிலத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 02 JUN 2021 5:31PM by PIB Chennai

ஒடிசா மாநிலத்தில் உள்ள இந்திய எஃகு ஆணையகத்திற்கு (செயில்) சொந்தமான ரூர்கேலா எஃகு ஆலையில் 100 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையத்தை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

வரும் நாட்களில் படுக்கைகளின் எண்ணிக்கை இங்கு 500 ஆக உயர்த்தப்படும்.

இந்த பிரம்மாண்ட கொவிட்  மையத்தில் உள்ள அனைத்து படுக்கைகளுக்கும்  எஃகு ஆலையிலிருந்து நேரடியாக பிராணவாயு செல்லும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிர் காக்கும் பிராணவாயு தடையில்லாமல் கிடைப்பதுடன், சிலிண்டர்களில் பிராணவாயுவை நிரப்புவது உள்ளிட்ட தளவாட பிரச்சினைகளும் நீக்கப்படும்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய எஃகு இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தே, ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் திரு கிஸோர் தாஸ், சுந்தர்கர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜூவல் ஓரம், செயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி திருமிகு சோமா மொண்டால், எஃகு அமைச்சகம் மற்றும் செயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த பிரம்மாண்ட சிகிச்சை மையம், தெற்கு ரூர்கேலா பகுதியில் பெருந்தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும், மூன்றாவது அலை உருவாகக் கூடும் என்ற சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு மருத்துவ ரீதியான வலிமையை அளிக்கும் என்றும் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, நிரந்தர மையத்தில் கொவிட் அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரவ மருத்துவப் பிராணவாயுவை உற்பத்தி செய்து விநியோகிப்பதிலும், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதிலும் செயில் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்வதாக அமைச்சர் கூறினார். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசின் முயற்சிகளுக்கு இடையறாது ஆதரவளிக்கும் செயில் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723797

*****************



(Release ID: 1723839) Visitor Counter : 155