அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அதிக குளிர் தேவைப்படாத ஆப்பிள் வகையை உருவாக்கியுள்ளார் இமாச்சலப்பிரதேச விவசாயி

Posted On: 29 MAY 2021 1:03PM by PIB Chennai

மலர்வதற்கும், கனியாவதற்கும் அதிக குளிர்ந்த நேரங்கள் தேவைப்படாத வகையில் சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் புதுமையான ஆப்பிள் வகையை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

கோடைக்காலத்தில், 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆப்பிள் விளைகிறது.

மணிப்பூர், ஜம்மு, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வணிக ரீதியாக இந்த ஆப்பிள் வகையைப் பயிரிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, புதுச்சேரி உள்ளிட்ட  23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனியாகும் தருவாயில்  உள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பனியாலா கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயியான திரு ஹரிமன் ஷர்மா, ஹெச்ஆர்எம்என் 99 என்ற புதிய ஆப்பிள் வகையை உருவாக்கி இதர விவசாயிகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தேசிய புதுமை  அமைப்பு இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளிக்கிறது. கடந்த 2014-19 ஆம் ஆண்டு வரையில், குறைந்த குளிர் பிரதேசங்கள் கண்டறியப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகை உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 20000 கன்றுகள் நடப்பட்டன.

3 முதல் 8 ஆண்டுகளான தாவரங்கள், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 5-75 கிலோ பழங்களைத் தந்துள்ளது. பிற ஆப்பிள் வகைகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் புதிய வகை ஆப்பிள்கள் அளவிலும், சுவையிலும், நிறத்திலும் மேம்பட்டு இருப்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722642

-----



(Release ID: 1722696) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Hindi , Punjabi