சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

"உள்ளொளியை கண்டறிதல்: மனநலமும் பெருந்தொற்றும்" எனும் தலைப்பில் இணைய கருத்தரங்கு

Posted On: 22 MAY 2021 4:40PM by PIB Chennai

கருணையும் புரிந்து கொள்ளுதலும் தான் ஒரு சமூகமாக நாம் மேம்பட வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமாகும். நாம் அனைவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்கொள்ளும் சர்வதேச பிரச்சினையாக கொவிட்-19 அமைந்துள்ளது என்று

"உள்ளொளியை கண்டறிதல்: மனநலமும் பெருந்தொற்றும்" எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில் பேசிய மனநல நிபுணர்கள் தெரிவித்தனர்.  

பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல கள விளம்பர அலுவலகம், மகாராஷ்டிரா மற்றும் கோவா மண்டலம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த இணைய கருத்தரங்கில், பெங்களூரு நிமான்சின் மனநல நிபுணர்களான உளவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் பிரதிமா மூர்த்தி மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் ஜோத்ஸ்னா அகர்வால் ஆகியோர் பேசினர்.

கொவிட் காரணமாக ஒருவர் எதிர்கொள்ளும் மன நல பிரச்சனைகளில் முக்கியமானது அச்சம் என்று டாக்டர் பிரதிமா மூர்த்தி கூறினார். மருத்துவமனையில் படுக்கை கிடைக்குமா, நுரையீரல் மற்றும் இதர உடல் உறுப்புகளுக்கு என்ன ஆகும் என்பது போன்ற பயங்கள் அதிகளவில் நிலவுவதாக மருத்துவர் தெரிவித்தார்.

ஏராளமான தகவல்கள் மூலம் குழப்பம் ஏற்படுவதாகவும் சரியான தகவல்களை ஒருவர் பெறுவது மிகவும் அவசியம் என்றும் மனநல நிபுணர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் ஒரு நபர், மன அழுத்தம், படபடப்பு போன்ற சிக்கல்களை எதிர் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் காரணமாக  எதிர்கொள்ளும் மன நல சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இவர்கள் வழங்கிய வழி முறைகள் வருமாறு: 

இந்த காலகட்டத்தில் நமது அன்றாட பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

நல்ல உணவு, போதுமான தூக்கம், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி, அமைதியான சிந்தனைகள், சிக்கல்களை அடையாளம் கண்டு, எதிர்கொண்டு அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவை அவசியமாகும்.

நல்ல தூக்கம் மிகவும் அவசியம். அடிக்கடி உங்கள் உடல் நிலையை கண்காணித்து கொள்ளுங்கள், முறையான உணவு முறையை கடைபிடியுங்கள், நீர் சக்தியை தக்க வைத்துக் கொள்ளுங்கள், ஆக்சிஜன் அளவை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளுங்கள், தேவை ஏற்படின் மருத்துவ உதவியை கோருங்கள் என்று நிபுணர்கள் மக்களை கேட்டுக் கொண்டார்கள்.

தங்களுக்கு நெருக்கமானவர்களின் உயிரிழப்பு, நிதி ரீதியான நஷ்டங்கள் ஆகியவற்றை சந்தித்து வரும் மக்களுக்கு மன நல ஆலோசனை மிகவும் முக்கியம். இதுபோன்றவர்களுக்கு உதவுவது அவசியமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 

குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அவர்கள் நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும்.

உங்கள் கவலைகளை குறித்துக் கொள்ள ஒரு புத்தகத்தையோ அல்லது பெட்டியையோ உருவாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை, உண்மையான எண்ணங்கள் மூலம் எதிர் கொள்ளலாம். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

யோகா இசை மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். முன் களப் பணியாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள். உண்மையான செய்தி ஆதாரங்களை தேர்ந்தெடுங்கள், நேர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்று மனநல நிபுணர்கள் தெரிவித்தனர். ஆன்மீகத்தில் மனதை செலுத்துவதும் நிம்மதி அளிக்கும்.

 நிமான்ஸ் கட்டணமில்லா உதவி எண்ணான 080-46110007-ஐ மனங்கள் ஆலோசனைக்கு அழையுங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உதவி எண் உள்ளது.

சுகாதார பணியாளர்களுக்காக நிமான்ஸ் வெளியிட்டுள்ள கையேட்டை https://nimhans.ac.in/wp-content/uploads/2021/04/FHW-Manual-Final.pdf எனும் இணைப்பில் காணலாம்.

 *****************


(Release ID: 1720967) Visitor Counter : 223


Read this release in: Hindi , Urdu , Marathi , English