பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

வன் தன் திட்டம் மூலம் ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி ரூ.5,80,000-க்கு விற்பனை

Posted On: 20 MAY 2021 11:44AM by PIB Chennai

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி, வன் தன் திட்டம் மூலம்   ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் சேகரிக்கும் வன உற்பத்தி பொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின்  இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கூட்டமைப்பு(டிரைபட்)  மேற்கொள்கிறது. இது இந்த கொவிட் நெருக்கடி நேரத்திலும், பழங்குடியினருக்கு வருவாயையும், வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. 

ராஜஸ்தானில் நடந்துள்ள ஒரு வெற்றிகரமான சம்பவம், வன் தன் விகாஸ் கேந்திரா தொகுப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் கடந்தாண்டில், 2019 வன் தன் விகாஸ் மையங்கள்  189 வன் தன் விகாஸ் மையங்களின் தொகுப்புகளாக ஏற்படுத்தப்பட்டது. இந்த தொகுப்பு  பழங்குடியினர் 57,292 பேருக்கு உதவி வருகிறது.  நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டில், 37,259 வன் தன் விகாஸ் மையங்கள், 2224 தொகுப்புகளாக செயல்பட டிரைபட் அனுமதித்தது. ஒவ்வொரு தொகுப்பிலும் பழங்குடியினர் 300 பேர் உள்ளனர்.

ராஜஸ்தானில் ஸ்ரீநாத் ராஜீவிகா மக்வஸ் என்ற பெயரில் ஒரு வன் தன் விகாஸ் மைய தொகுப்பு செயல்படுகிறது. இந்த தொகுப்பு திருமதி முக்லி பாய் என்பவர் தலைமையில் செயல்படுகிறது. இந்த தொகுப்பு குறுகிய காலத்தில் ரூ.5,80,000 மதிப்பிலான மூலிகை வண்ணப் பொடியை விற்றுள்ளது.

ராஜஸ்தான் உதய்பூரில் உள்ள ஜதோல் பழங்குடியினர், வனப் பகுதியில் பல மலர்களை சேகரித்து ஸ்ரீநாத் வன் தன் விகாஸ் கேந்திராவில் ஒப்படைக்கின்றனர். அங்கு இந்த மலர்கள் சுடுநீரில் கொதிக்க வைக்கப்பட்டு பல வண்ணங்களில் இயற்கை சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சாயத்தில் சோள மாவு சேர்க்கப்பட்டு வண்ண பொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு கடந்த ஹோலி பண்டிகையின் போது நல்ல வரவேற்பு இருந்ததால், மூலிகை வண்ணப் பொடி ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த மூலிகை வண்ணப் பொடி தயாரிப்பில் 600 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். வன் தன் திட்டம், பழங்குடியின மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பழங்குடியினர் தயாரிப்பு பொருட்கள் வன் தன் விகாஸ் கேந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால், இத்திட்டம் 23 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், 6.67 லட்சம் பழங்குடியினருக்கு தொழில் வாய்ப்புகளை அளிக்கிறது.

வன் தன் தொடக்க நிறுவனம் திட்டத்தால் இதுவரை 50 லட்சம் பழங்குடியினர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை டிரைபட் மேம்படுத்துகிறது. மேலும், உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு ஆதரவு அளிப்பதையும், தற்சார்பு இந்தியா கொள்கையையும் வன் தன் திட்டம் ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720172

*****************



(Release ID: 1720244) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Telugu