சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பொது சுகாதார எதிர்வினை மற்றும் மேற்கு வங்கம் மற்றும் எட்டு வடமேற்கு மாநிலங்களில் தடுப்பு மருந்து வழங்குதலின் முன்னேற்றம் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு
Posted On:
19 MAY 2021 6:36PM by PIB Chennai
கொவிட்-19 பொது சுகாதார எதிர்வினை மற்றும் மேற்கு வங்கம் மற்றும் எட்டு வடமேற்கு மாநிலங்களில் தடுப்பு மருந்து வழங்குதலின் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு செய்தார்.
மேற்கு வங்கம் மற்றும் எட்டு வடமேற்கு மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் அமைச்சர் இன்று உரையாடினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே உடனிருந்தார். இம்மாநிலங்கள் அதிக அளவிலான தினசரி பாதிப்புகளையும் அதிக உயிர் இழப்புகளையும் பதிவு செய்து வருகின்றன.
திரிபுரா முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் திரு பிப்லாப் குமார் தேப், அசாம் சுகாதார அமைச்சர் திரு கேஷப் மகந்தா, மேகாலயா சுகாதார அமைச்சர் திரு ஏ கே ஹேக், மணிப்பூர் சுகாதார அமைச்சர் திரு லால்பொக் லக்பம் ஜெயந்த குமார் சிங், மிசோரம் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆர் லல்தாங்லியானா, அருணாச்சலப் பிரதேச சுகாதார அமைச்சர் திரு அலோ லிபாங், நாகாலாந்து சுகாதார அமைச்சர் திரு பங்குநியூ போம் மற்றும் சிக்கிம் சுகாதார அமைச்சர் டாக்டர் மணி குமார் சர்மா ஆகியோர் காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், "பெருந்தொற்று ஆரம்பித்தபோது வெறும் ஒரு ஆய்வகம் இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 2000 கொவிட் பரிசோதனை ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு 25 லட்சம் பேரை பரிசோதனை செய்யும் அளவுக்கு நமது திறனை மேம்படுத்தி இருக்கிறோம். நேற்று ஒரு நாள் மட்டும் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து நாம் வரலாறு படைத்துள்ளோம். இது சர்வதேச சாதனையும் ஆகும்," என்று கூறினார்.
சரியான கொவிட் நடத்தை விதிமுறையை பின்பற்றி தற்போதைய பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தடுப்பு மருந்து வழங்கலின் முக்கியத்துவத்தை கோடிட்டுகாட்டிய அவர், 18 கோடி டோஸ்கள் எனும் முக்கிய எண்ணிக்கை இந்தியா சமீபத்தில் கடந்ததாக குறிப்பிட்டார்.
இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சிறு மாநிலங்களில் தொற்றின் அளவு அதிகரித்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக மலை மாநிலங்களிலும், தொலைதூர இடங்களிலும் தொலை மருத்துவ வசதியை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கருப்பு பூஞ்சை மற்றும் ஆக்சிஜன் பிரச்சனைகளில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி வருவதாக அவர் கூறினார். விதிமுறைகளை பின்பற்றி இந்த போரை நாம் வெல்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
**
(Release ID: 1720094)
Visitor Counter : 231