பாதுகாப்பு அமைச்சகம்

ஈ-சஞ்ஜீவனி தளத்தில் ராணுவ தேசிய வெளி நோயாளிகள் பிரிவு தொடக்கம்

Posted On: 14 MAY 2021 6:35PM by PIB Chennai

மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அதை களையும் விதமாக, ஈ-சஞ்ஜீவனி தளத்தில் இலவச ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ராணுவத்தின் முன்னாள் மருத்துவர்கள் முன்வந்து இருக்கிறார்கள். இதன் மூலம், ராணுவ முன்னாள் மருத்துவ நிபுணர்களின் மதிப்புமிக்க அனுபவத்தின் பலனை நாடு முழுவதும் உள்ள மக்கள் பெற முடியும்.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மொகாலியில் உள்ள சி-டாக் உருவாக்கியுள்ள ஈ-சஞ்ஜீவனி வெளி நோயாளிகள் பிரிவு, இந்திய மக்கள் அனைவருக்கும் இலவச ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை வழங்குவதோடு, மருந்துகளுக்கான பரிந்துரையையும் இணையம் மூலமாகவே வழங்குகிறது.

மூன்று மாநிலங்களில் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினரின் வெளி நோயாளிகள் பிரிவு, பாதுகாப்பு தேசிய வெளிநோயாளிகள் பிரிவு என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2021 மே 14 முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. www.esanjeevaniopd.in என்ற இணைய முகவரியில் சேவைகள் கிடைக்கும். ராணுவத்தின் மூத்த மருத்துவ நிபுணர்களின் சேவைகள் கிடைத்திருப்பதன் மூலம் வீட்டில் இருந்தவாறே வெளி மருத்துவ சேவைகள் வழங்கும் திட்டத்திற்கு ஊக்கம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் மூத்த மருத்துவர்களின் பரந்து விரிந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம், மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்வதை தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு தேவையான மருத்துவ அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பெற முடியும். இதனால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்படுவதோடு, குறைந்த அளவே உள்ள சுகாதார வளங்கள் மீது அதிக சுமை ஏற்றப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. esanjeevaniopd.in எனும் தளத்தில் நுழைந்து மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*****************



(Release ID: 1718692) Visitor Counter : 186