தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தில்லியில் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை அமைத்தது இஎஸ்ஐசி
Posted On:
09 MAY 2021 8:05PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இஎஸ்ஐசி, தில்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள தனது இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது.
நிமிடத்துக்கு 440 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலை, பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
நிமிடத்துக்கு 220 லிட்டர் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலை புதுதில்லி ஜில்மில் பகுதியில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் இன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மருத்துவமனைகளில், ஐசியு மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாடு முழுவதும் 30 மருத்துவமனைகளை, கொவிட் பிரத்தியேக மருத்துவமனைகளாக மாற்றும் நடவடிக்கையில் இஎஸ்ஐசி தீவிரமாக உதவி வருகிறது.
இந்த மருத்துவமனைகளில் 300 ஐசியு படுக்கைகள் மற்றும் 250 வென்டிலேட்டர் படுக்கைகள் உட்பட 4200 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியும். இந்த மருத்துவமனைகளில், படுக்கைகள் காலியாக உள்ளதா என்பதை அறியும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை அடைந்ததற்காக, இஎஸ்ஐசி மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய இணையமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றுக் காலத்தில், இவர்கள் தங்களின் தார்மீக நெறியை பின்பற்றி, மனித குலத்துக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
*****************
(Release ID: 1717313)
Visitor Counter : 223