குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூகத்தில் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 12 APR 2021 6:07PM by PIB Chennai

சமூகத்தில் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவி ராஜயோகினி தாதி ஜான்கி நினைவாக தில்லியில் இன்று  தபால் தலையை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.  அப்போது அவர் கூறியதாவது:

பெண்களால் வழிநடத்திச் செல்லப்படும் அமைப்பாக, பிரம்ம குமாரிகள் அமைப்பு உள்ளது பாராட்டுக்குரியது. இந்த உலகளாவிய இயக்கம், பெண்களின் அதிகாரம் மற்றும் சுதந்திரத்தின் முன்மாதிரியான சாம்பியனாக இருந்து வருகிறது மற்றும் ஆன்மீக சாதனைகள் பாலின அடிப்படையிலான வேறுபாட்டை மீறும் என்பதை நிரூபிக்கிறது.

வேத காலங்களில் கார்கி மற்றும் மைத்ரேயி போன்ற பெண் அறிஞர்கள் இருந்தனர். ஒவ்வொரு துறையிலும் பெண் தலைவர்கள் இருந்த வளமான வரலாறு இந்தியாவில் உள்ளது. பண்டைய இந்தியாவில், தெய்வீக பெண்மையை சக்திவடிவத்தில் வணங்கினர்.

சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை மாற்றியமைக்க வேண்டும்.  கடந்த 2019ம் ஆண்டு, பிரம்ம குமாரிகளின் சாந்திவனத்தில் மதிப்பிற்குரிய தாதி ஜான்கியை நான் சந்தித்தேன். அவர் முன்னணி ஆன்மீக தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

அவர் அமைதியின் உருவம். கடைசி வரை, தாம் போதித்ததை தான் அவர்  பின்பற்றினார். தாதி வாழ்க்கையின்  மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு வாழும் உதாரணமாக பிரம்ம குமாரிகள் அமைப்பு உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது.

தாதிஜியின் வாழ்க்கை கடவுளுக்காகவும், மனிதநேயத்தின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. அதிலிருந்து மக்கள் உத்வேகம் பெற வேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி காண்பதுதான் தாதி ஜான்கியின் தத்துவம்.

அவரை மக்கள் பின்பற்றி, தற்போதைய கொவிட் தொற்று நேரத்தில், தேவையானவர்களுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும். மிகச் சிறந்த ஆன்மீக குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு தபால் தலை வெளியிடுவது அரசு செய்யும் மிகப் பொருத்தமான மரியாதை.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், முன்னாள் சிபிஐ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், பிரம்ம குமாரி சகோதரிகள் ஆஷா, ஷிவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711184

*****************


(Release ID: 1711224) Visitor Counter : 258