பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 நிலைமை குறித்து முதல் அமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
17 MAR 2021 5:09PM by PIB Chennai
பல்வேறு முக்கிய கருத்துக்களை தெரிவித்ததற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவை எதிர்த்து நாடு போராடி வருகிறது. இந்திய மக்கள் கொரோனாவை எதிர்கொண்ட விதத்தை உலகம் முழுவதும் உதாரணமாக பேசி வருகிறார்கள். 96 சதவீதத்துக்கும் அதிகமான தொற்றாளிகள் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.
உலகத்திலேயே மிகவும் குறைவான இறப்பு விகிதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
நமது நாட்டிலும் உலகத்திலும் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து வழங்கப்பட்ட விளக்கத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் பல சுற்று தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நமது நாட்டிலும், குறைந்து கொண்டே வந்த தொற்றின் அளவு சில மாநிலங்களில் திடீரென்று அதிகரித்துள்ளது.
நீங்கள் அனைவரும் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறீர்கள். இருந்த போதிலும், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. அனைத்து முதல்வர்களும் நிலைமை குறித்து கவலை அடைந்துள்ளனர்.
இந்த முறை, இது வரை பாதிப்படையாத பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் கூட தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் நாட்டில் உள்ள 70 மாவட்டங்களில் 150% எனுமளவுக்கு பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாம் இதை இப்போது தடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பெருந்தொற்று பரவிவிடும்.
கொரோனாவின் இந்த "இரண்டாவது அதிகரிப்பை" தடுப்பதற்காக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை. முகக் கவசம் அணிவது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. உள்ளாட்சி அளவில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரம் இது.
பரிசோதனைகளின் எண்ணிக்கையும், தடுப்பு மருந்து வழங்குதல் எண்ணிக்கையும் சில இடங்களில் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான நமது போரின் சாதனைகளில் இருந்து கிடைத்துள்ள நம்பிக்கை கவனக்குறைவாக மாறிவிடக்கூடாது.
மக்களை பயப்படுத்தக்கூடாது, அதேசமயம் சிக்கலில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். நமது கடந்தகால அனுபவங்கள் மற்றும் நமது முயற்சிகள் ஆகியவற்றை பயன்படுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்குண்டான அனுபவங்களும் நல்ல நடவடிக்கைகளும் இருக்கும். பல்வேறு மாநிலங்கள் இதர மாநிலங்களிடம் இருந்து பாடங்களை கற்று வருகின்றன. இத்தகைய நிலைமைகளின் போது அடிமட்ட அளவில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நமது அரசு இயந்திரத்திற்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாம் துடிப்புடன் செயலாற்ற வேண்டிய நேரமிது.
சிறு கட்டுப்பாட்டு பகுதிகள் மீது எந்த ஒரு கவனக் குறைவும் இருக்கக் கூடாது என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். தேவை ஏற்பட்டால், மாவட்டங்களில் பணியாற்றி வரும் பெருந்தொற்று எதிர்ப்பு குழுக்களுக்கு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கான நிலையான செயல்பாட்டு வழி முறைகள் குறித்து மீண்டும் ஒரு முறை பயிற்சி அளிக்கலாம்.
ஒவ்வொரு கட்டத்திலும் நீண்ட ஆலோசனைகளை மீண்டும் ஒருமுறை நடத்த வேண்டும். 'பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தொடர்பில் இருந்தவர்களையும் விரைந்து கண்டறிவது மிகவும் முக்கியம்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை விகிதத்தை 70 சதவீதத்துக்கும் அதிகமாக வைத்திருக்க வேண்டும்.
துரித ஆன்டிஜன் பரிசோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களான கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட மாநிலங்கள் மட்டுமில்லாது நாடு முழுவதும் இது செய்யப்பட வேண்டும்.
தொடக்கத்தில் பாதிக்கப்படாத இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் தற்போது தொற்று பரவலை அதிகமாக சந்தித்து வருகின்றன. இந்த போரில் நாம் பிழைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது கிராமங்களில் தொற்று பரவாமல் தடுத்தது தான். ஆனால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் பாதிக்கப்பட்டால் கிராமங்கள் பாதிக்கப்படுவதற்கு நீண்ட நேரம் ஆகாது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில், நமது வளங்கள் போதுமானதாக இருக்காது. எனவே, சிறு நகரங்களில் பரிசோதனைகளை நாம் அதிகப்படுத்த வேண்டும்.
பரிந்துரை முறை மற்றும் அவசர ஊர்தி அமைப்பு ஆகியவற்றின் மீது சிறு நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்போது பயணங்கள் நடைபெறுகின்றன. பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, பயணம் செய்பவர்கள் மற்றும் அவர்களது தொடர்புகளின் தகவல்களை அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான புதிய வழிமுறை தேவைப்பட்டால் அது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் அதே போன்று, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து மதிப்பிட வேண்டும்.
நண்பர்களே,
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை குறித்து பலரும் இங்கு பேசினார்கள். கட்டாயமாக, தடுப்பு மருந்து சிறப்பானதொரு ஆயுதமாக நமது கைகளில் ஒரு வருடத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கும் அளவு நமது நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதே சமயம், தடுப்பு மருந்து வீணாவதை தடுக்க வேண்டும். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடுப்புமருந்து வீணாதல் விகிதம் 10% எனுமளவுக்கு இருக்கிறது. தடுப்பு மருந்தை வீணடிப்பதன் மூலமாக அடுத்தவர்களின் உரிமையை நாம் மறுக்கிறோம். மற்றவர்களின உரிமையை பறிப்பதற்கு எந்த விதமான உரிமையும் நமக்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
தடுப்பு மருந்து வீணாவதை தடுப்பதற்காக உள்ளூர் அளவில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பு மருந்து வீணாவதை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை நாம் செய்ய வேண்டும். நாம் முயற்சி செய்தால், கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இரண்டு டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கும் பணி வெற்றி அடைய வேண்டும்.
இறுதியாக, சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவற்றை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
மருந்துகளை பயன்படுத்துவதோடு விதிகளையும் நாம் பின்பற்ற வேண்டும். மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே நோய் அதுவாக அகன்று விடாது. சில வழி முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.
அடுத்ததாக, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை விகிதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். சிறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்க உள்ளாட்சிகளை நாம் வலியுறுத்த வேண்டும். இந்தப் பணியை அவர்கள் துரிதப்படுத்தினால் மட்டுமே நோய் பரவலை நம்மால் தடுக்க முடியும்.
மாநில வாரியான வரைபடத்தில் நாம் பார்த்தவாறு தடுப்பு மருந்து வழங்கும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது அவசியமாகிறது. அரசு மற்றும் தனியார் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் வேண்டும்.
தொழில்நுட்பம் நமக்கு பெரிதும் உதவுகிறது. அதை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது மையங்கள் சிறப்பாக பணியாற்றினால் தடுப்பு மருந்து வீணாவதை நாம் தடுக்க முடியும். மேலும், மையங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஒரு புதிய நம்பிக்கை உடனடியாக உருவாகும். இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் வழங்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பு மருந்துகள் தொடர்ந்து தயாரிக்கப்படுவதால்
அவற்றை வழங்கும் நடவடிக்கையை நாம் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு கூட அது இழுத்துக் கொண்டே போய்விடும்.
தடுப்பு மருந்துகளின் காலாவதி தேதி மற்றுமொரு முக்கிய விஷயமாகும்.
முதலில் வரும் தடுப்பு மருந்துகளை நாம் முதலில் பயன்படுத்திவிட வேண்டும்.
இவற்றோடு சேர்த்து இதர அடிப்படை விஷயங்களையும் நாம் கவனத்தில் கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும். முகக் கவசங்களை பயன்படுத்துதல், தனிநபர் இடைவெளி, தூய்மையின் மீது கவனம் செலுத்துதல் ஆகியவற்றை நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும் இவற்றையெல்லாம் நாம் கடந்த ஒரு வருடமாக செய்து வருகிறோம். அவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நாளை முதல் பஞ்சாப் அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல விஷயமாகும். நிலைமையை உறுதியுடன் நாம் கையாளவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இத்தகைய விஷயங்களில் மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இன்னும் ஆலோசனைகள் உங்களுக்கு இருந்தால் அவற்றை எனக்கு அனுப்பவும். ஆலோசனைகளை நீங்கள் விரைந்து அனுப்பினால், என்னுடைய துறை மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை நான் எடுக்கிறேன்.
நம் அனைவரின் ஒத்துழைப்பின் காரணமாகத்தான் இதுவரையிலான போரை நாம் வென்று இருக்கிறோம். நமது கொரோனா வீரர்களும், பொதுமக்களும் பெரிதும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். 130 கோடி மக்களின் ஒத்துழைப்போடு தான் இது சாத்தியமாகி உள்ளது. மீண்டும் ஒரு முறை நாம் மக்களோடு இணைந்தால், பாதிப்புகள் அதிகரித்து வருவதை நம்மால் கட்டாயம் தடுக்க முடியும். கூட்டங்களை அடிக்கடி நடத்துங்கள், தேவையான நடவடிக்கைகளை எடுங்கள், தானாக முன்னேற்றம் ஏற்படும்.
குறுகிய அவகாசத்தில் இந்த கூட்டத்திற்கு நான் உங்களை அழைத்த போதும் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு விரிவான விளக்கங்களை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி!
குறிப்பு: பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.
----
(Release ID: 1705819)
Visitor Counter : 262
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam