குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஒன்றிணைந்த இந்தியாவுக்காக பேசுமாறும் பணியாற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் திரு வெங்கையா நாயுடு வேண்டுகோள்

Posted On: 13 MAR 2021 2:09PM by PIB Chennai

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவையில் சிறப்பாக பணியாற்றவும், சிறந்த நாடாளுமன்றவாதிகளாக நாட்டுக்கு சேவையாற்றவும் 12 அறிவுரைகளை மாநிலங்களவைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவர்களுக்கு வழங்கினார்.

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அறிமுக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அரசை விமர்சிக்கும் உரிமை எதிர்கட்சிகளுக்கு உள்ளது. சொல்லப்போனால், அது அவர்களது கடமை ஆகும். ஆனால், விமர்சனம் என்பது விவரமானதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும். எதிர்க்க வேண்டுமே என்பதற்காக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்ப்பது எதிர்கட்சிகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “விமர்சனத்தின் தரம் என்பது அரசிடம் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை பெற வேண்டும்,” என்றார்.

நாட்டின் நிலைமை குறித்த ஆழ்ந்த அறிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்ட அவர், “சாதி, நிறம், பிராந்தியம் மற்றும் மதம் ஆகியவற்றின் மூலம் பிரிவினைகளை உண்டாக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் நமது பன்முக சமுதாயத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது உங்களது கடமையாகும்,” என்றார்.

நாட்டின் ஒற்றுமையையும், பெருமையையும் கட்டிக் காப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமையாகும் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, அவையில் எழுப்பப்படும் விஷயங்கள் குறித்த ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை துணை தலைவர் திரு ஹரிவன்ஷ், தலைமை செயலாளர் திரு தேஷ் தீபக் வெர்மா, செயலாளர் டாக்டர் பி பி கே ராமாச்சார்யுலு மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

------



(Release ID: 1704641) Visitor Counter : 196