குடியரசுத் தலைவர் செயலகம்

கல்வி தான் மாற்றத்திற்கான தூண்டுகோல், இளைஞர்கள் தான் சமூக மாற்றத்திற்கான மிக சக்தி வாய்ந்த முகவர்கள்: குடியரசுத் தலைவர் திரு கோவிந்த்


அண்ணா பல்கலைக்கழகத்தின் 41-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 11 MAR 2021 2:12PM by PIB Chennai

கல்வி தான் மாற்றத்திற்கான தூண்டுகோல் என்றும் இளைஞர்கள் தான் சமூக மாற்றத்திற்கான மிகவும் சக்தி வாய்ந்த முகவர்கள் என்றும் இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் சென்னையில் இன்று (மார்ச் 11, 2021) நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 41-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, பயன்பாட்டு அறிவியல் போன்றவற்றில் சமூகத்தின் தற்போதைய தேவைக்கேற்ப இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் வழங்கப்படுவதைக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகம், கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் கூறினார். இதன் காரணமாகவே கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்ஃஎப்) ஆகியவற்றின் சிறந்த நிறுவனங்களுள் இந்த பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது.

இளம் மாணவர்களிடையே சரியான கற்றல் அணுகுமுறையை வளர்ப்பதற்காக தொழில்நுட்ப நோக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலான இணக்கமான சூழலியலை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மாணவர்களிடையே ஊக்குவிக்கப்படும் அறிவியல் சார்ந்த உணர்வுகள், இந்த பல்கலைக்கழகத்தின் திட்டங்களிலும் சாதனைகளிலும் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோளின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றும் முதல் இந்திய பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் இது பெறுவதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அனுசாட் என்ற செயற்கைக்கோள் வெறும் சாதனை மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள இளைஞர்கள் வானளாவிய சாதனைகளைப் புரிவதற்கான உந்து சக்தியாகவும் அமைவதாக அவர் கூறினார்.

தேசிய கல்விக்கொள்கை 2020 குறித்து பேசிய அவர், ஒவ்வொரு தனி நபரின் குண நலமும் அறிவை அடித்தளமாகக் கொண்டு அமைவதாக கூறினார். கல்வி தான் மாற்றத்திற்கான தூண்டுகோல் மற்றும் இளைஞர்கள் தான் சமூக மாற்றத்திற்கான மிக சக்திவாய்ந்த முகவர்கள் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படும் போது வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான மாற்றங்களை அவர்களால் ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதைத்தான் தேசிய கல்விக் கொள்கை 2020 நோக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய மாறி வரும் சூழல்களுக்கு ஏற்ப ஆராய்ச்சி, திறன் மற்றும் அறிவுக்கூர்மை சார்ந்த துறைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன கல்விமுறையை வழங்க புதிய கொள்கை திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் எதிர்கால கண்ணோட்டத்துடன் இணைந்து நமது வளமான பாரம்பரிய கலாச்சாரமும் அதன் வரையறைக்குள் உட்படுத்தப்படும். தார்மீக மாண்புகளை வழங்குவதிலும் இந்திய கலாச்சாரம் குறித்த புரிதலை ஊக்குவிப்பதிலும் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது. இந்த கொள்கையை அமல்படுத்துவது வாயிலாக நவீன கற்றல் மற்றும் கல்விக்கான சகாப்தத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நமது நாட்டு லட்சியங்களுக்கு ஈடாக நம் நாட்டு வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும்  தொழில் வல்லுனர்கள் அடங்கிய படையை இந்தக் கொள்கை உருவாக்கும்.

*****************



(Release ID: 1704148) Visitor Counter : 198


Read this release in: English , Urdu , Hindi , Marathi