விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமரின் கிசான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விருதுகள்: மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வழங்கினார்

Posted On: 24 FEB 2021 5:42PM by PIB Chennai

 பிரதமரின் கிசான் திட்டத்தை மிகச் சிறப்பாகச் அமல்படுத்திய மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று விருதுகளை வழங்கினார்.

பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த விருதுகளை வழங்கினார்.

தரவுகளை சரிபார்த்தல், விவசாயிகளின் குறைகளை தீர்த்தல், உரிய காலத்தில் நேரடியாக சென்று விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பிரிவுகளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்புமிக்க  பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 24.2.2021 வரை 10.75 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ரூ. 1,15,638.87 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு தோமர் தெரிவித்தார்.

 

வேளாண்துறையில் ஓர் மைல்கல் முன்முயற்சியாக எதிர்கால தலைமுறையினர் இந்தத் திட்டத்தை நினைவு கூர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் கடின உழைப்பைப் பாராட்டிய அமைச்சர், கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அவர்களது சிறப்பான பங்களிப்பையும் எடுத்துரைத்தார்அசாதாரண சூழ்நிலைகளுக்கு இடையிலும் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான ஆற்றலை விவசாயிகளின் கடுமையான உழைப்பு பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள போதுமான நிதி குறித்துப் பேசிய அமைச்சர், மாநிலத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தால் பயனடைவதை உறுதி செய்வதற்காக பயனாளிகளை இதில் இணைப்பது தொடர்பான பிரச்சாரங்களை மாநில அரசுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700481

------



(Release ID: 1700591) Visitor Counter : 139