பிரதமர் அலுவலகம்

விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 19 FEB 2021 2:26PM by PIB Chennai

மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு ஜெகதீப் தன்கர் அவர்களே, விஸ்வ-பாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பித்யுத் சக்ரவரத்தி அவர்களே, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் என் துடிப்பு மிக்க இளைஞர்களே!

அன்னை பாரதிக்கு குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பெருமை சேர்த்த அற்புதமான கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக நான் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது உத்வேகமும், மகிழ்ச்சியும், புதிய சக்தியும் தருவதாக இருக்கிறது. இந்தப் புனித மண்ணில் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், விதிமுறைகள் காரணமாக நேரில் வர முடியவில்லை. தொலைவில் இருந்தே உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, புனித மண்ணுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறுகிய இடைவெளியில் எனக்கு கிடைத்த 2வது வாய்ப்பு இது. உங்கள் வாழ்வில் மிக முக்கியமான இந்தத் தருணத்தில் இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய நாள் மகத்தான உத்வேகத்தை ஏற்படுத்திய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாளாகவும் இருக்கிறது.  அவரது பிறந்த நாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவாஜி-உத்சவ் என்ற தலைப்பில் சிவாஜியின் வீரம் பற்றி குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கவிதை படைத்துள்ளார். அவர் கூறியுள்ளது:

कोन्दूर शताब्देर

कोन्एक अख्यात दिबसे

नाहि जानि आजि, नाहि जानि आजि,

माराठार कोन्शोएले अरण्येर

अन्धकारे बसे,

हे राजा शिबाजि,

तब भाल उद्भासिया भाबना तड़ित्प्रभाबत्

एसेछिल नामि

एकधर्म राज्यपाशे खण्ड

छिन्न बिखिप्त भारत

बेँधे दिब आमि’’

அதாவது, பல நூறாண்டுகளுக்கு முன்பு, அடையாளம் கூற முடியாத காலத்தில், அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

மலை சிகரத்தின் உச்சியில் இருந்தும், அடர்ந்த வனத்தில் இருந்தும் மின்னலைப் போல உனக்கு இந்த சிந்தனை தோன்றியதா மன்னர் சிவாஜியே அவர்களே.

பிரிந்து கிடக்கும் இந்த தேசத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற சிந்தனை அப்படி வந்ததா?

இதற்காக நான் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமா? என்பதாகும்.

இதை நாம் மனதில் கொண்டு, நம் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் தாகூர் நமக்கு அளித்துள்ள அறிவுரை.

நண்பர்களே,

நீங்கள் பல்கலைக்கழகத்தின் அங்கமாக மட்டுமின்றி துடிப்பான பாரம்பர்யத்தின் ஜோதியை ஏந்திச் செல்பவர்களாகவும் இருக்கிறீர்கள். ``அனைவருக்கும் இந்தியாவின் கலாச்சாரம் பற்றி தெரிய வேண்டும், மற்றவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தான் இதற்கு விஸ்வ-பாரதி என குருதேவர் பெயரிட்டார்.''

பரம ஏழைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய முயற்சிகள், ஆராய்ச்சிகள் நடக்கும் இடமாக, வளமான இந்திய பாரம்பர்யத்தை பின்பற்றும் இடமாக விஸ்வ-பாரதியை அவர் உருவாக்கினார்.

நண்பர்களே,

அறிவைப் போதிக்கும் இடமாக மட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் உச்சத்தை அடையும் முயற்சியாக விஸ்வ-பாரதியை குருதேவ் தாகூர் உருவாக்கினார். வளாகத்தில் புதன்கிழமை `உபாசனா' இருக்கும்போது உங்களை சுயமதிப்பீடு செய்து கொள்கிறீர்கள். குருதேவ் தொடங்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது சுயமதிப்பீடு செய்கிறீர்கள். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

आलो अमार

आलो ओगो

आलो भुबन भारा

எனவே, நமது மனசாட்சியை விழிப்புறச் செய்யும் ஜோதிக்கான அழைப்பு அது. மாறுபட்ட முரண்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு இடையில் நம்மை நாம் கண்டறிய வேண்டும் என்று தாகூர் விரும்பினார். அதேசமயத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து அவர் பெருமை கொண்டிருந்தார். இந்த வளாகத்தில் கல்வி கற்று, குருதேவின் தொலைநோக்கு சிந்தனையை அறியும் வாய்ப்பு கிடைப்பது பெருமைக்குரியதாக உள்ளது.

நண்பர்களே,

அனுபவம் சார்ந்த கல்வியை அளிக்கும் விஸ்வ-பாரதி, அறிவுக்கடலாக உள்ளது. கற்பனைத் திறனுக்கும், அறிவுக்கும் எல்லைகள் கிடையாது என்ற அடிப்படையில் இதை குருதேவ் உருவாக்கினார். இவை என்றும் அழியாதவை என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். எப்போதும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.  அறிவும், அதிகாரமும் பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

உங்களுடைய அறிவு தேசத்துக்கு பெருமை சேர்ப்பதாகவோ அல்லது இருளில் தள்ளுவதாகவோ இருக்கலாம். அதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். நல்ல கல்வி கற்ற, திறமைசாலிகள் பலர் உலகில்  தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து கொரோனா போன்ற காலங்களில் சிகிச்சை அளிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

எனவே, இது சித்தாந்தம் அடிப்படையிலானது அல்ல, மனநிலையைப் பொருத்த விஷயம் இது. நல்லதற்கு பயன்படுத்தினால் நல்லது நடக்கும். ஆனால், தவறாகப் பயன்படுத்தினால் விளைவு வேறு மாதிரியாகிவிடும்.

உங்கள் நோக்கம் தெளிவாக இருந்து, பாரத மாதா மீது பற்று கொண்டிருந்தால், ஒவ்வொரு முயற்சியும், நல்ல பலன்களைத் தரும். முடிவுகள் எடுக்க தயங்கக் கூடாது. அப்படி தயங்குவது நமக்கு பெரிய நெருக்கடியாக இருக்கும். முடிவெடுக்க துணிச்சல் இல்லாமல் போனால், இளமை போய்விடும்.

இளைஞர்களின் புதுமை சிந்தனை முயற்சிகள் இருக்கும் வரையில், நாட்டின் எதிர்காலம் பற்றி நான் கவலைப்படத் தேவையிருக்காது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்  அரசு அளிக்கும்.

நண்பர்களே,

இங்கிருந்து நீங்கள் பட்டம் பெற்றுச் செல்லும்போது, வாழ்வில் அடுத்த கட்டமாக பல புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

நண்பர்களே,

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாள் குறித்து இன்று நாம் பெருமையாகப் பேசுகிறோம். தரம்பால் அவர்களை இன்று நான் நினைவுகூர்கிறேன். சிறந்த காந்தியவாதி தரம்பால் அவர்களின் பிறந்த நாளும் இன்று தான். தாமஸ் மன்றோ நடத்திய தேசிய கல்வி ஆய்வு குறித்த விவரங்களை தனது புத்தகத்தில் தரம்பால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1820ல் நடத்தப்பட்ட அந்த கணக்கெடுப்பில், அப்போது இந்தியாவில் கல்வி அறிவு உயர்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, கல்வியை ஊக்குவிக்கும் இடங்களாகவும் இருந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. குருகுல பாரம்பர்யத்தைத் தொடர வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப் பட்டிருந்தது. நிறைய கல்வி நிலையங்கள் இருந்தன, பல்கலைக்கழகங்கள் பெரிதும் மதிக்கப்பட்டன.

வங்காளம் மற்றும் பிகாரில் 1830-ல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளிக்கூடங்கள் இருந்ததாக, வில்லியம் ஆடம் காலத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்ததாகவும் இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நம் கல்வி எந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது என்பதற்காக இவற்றைக் கூறுகிறேன். பிரிட்டிஷ் காலத்தில் நமது கல்வி முறைக்கு என்ன ஆனது. அதன் பிடியில் இருந்து விடுவிக்க குருதேவ் விஸ்வ-பாரதியை தொடங்கினார். பல கட்டுப்பாடுகளில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. தொழில்முனைவு வாய்ப்பு, சுயவேலை வாய்ப்பை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாகவும் இது இருக்கும். பலமான ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனை படைப்புகளுக்கு ஊக்கம் அளிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நண்பர்களே,

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியா தற்சார்பு அடைவது சாத்தியமற்றது. ஆறாம் வகுப்பில் இருந்தே தச்சு வேலை முதல் கம்ப்யூட்டர் கோடிங் கற்பது வரையில் பல திறன்களில் பயிற்சிகள் அளிக்க இக்கொள்கை வழிவகுக்கிறது. இதுவரை இவை பெண்களுக்கு அளிக்கப்படவில்லை. பெண்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, விரும்பிய காலத்தில் படிப்பில் சேரவும், விலகவும் வாய்ப்பு அளிக்கும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

அறிவு வளம் மற்றும் அறிவியல் திறமையில் வங்காளம் முன்னிலை வகித்து, பெருமைக்குரிய நிலை இருந்துள்ளது. ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற சிந்தனையின் உத்வேகத்தை வங்காளம் தான் தந்தது. இன்றைக்கு 21ஆம் நூற்றாண்டு அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதாக உள்ளது. உங்கள் மீது தான் எல்லோரின் பார்வையும் உள்ளது. இந்தியாவின் அறிவு வளம் மற்றும் அடையாளத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்ப்பதில் விஸ்வ-பாரதி முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில் நுழையப் போகிறோம். இந்தியா பற்றிய தோற்றத்தை உலகெங்கும் பரவச் செய்து, நிறைய பேருக்கு தெரிவிக்க வேண்டிய வாய்ப்பு விஸ்வ-பாரதி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது. மற்ற கல்வி நிலையங்களுக்கு முன்மாதிரியாக விஸ்வ-பாரதி அமைய வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என விஸ்வ-பாரதி மாணவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். 2047ல் இந்திய சுதந்திரத்தின் 100வது ஆண்டு கொண்டாடப்படும்போது, விஸ்வ-பாரதி செய்து முடிக்க வேண்டிய மிகப் பெரிய 25 திட்டங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நீங்கள் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளீர்கள். எல்லா கிராமங்களையும் தற்சார்பாக ஆக்கும் பணியைத் தொடங்க முடியுமா? மரியாதைக்குரிய பாபு அவர்கள், ராம ராஜ்யம், கிராம சுயராஜ்யம் பற்றிப் பேசினார்கள்.. என் இளம் நண்பர்களே! கிராம  மக்களை தற்சார்பை எட்டிய கைவினைஞர்களாக, விவசாயிகளாக மாற்றுங்கள். அவர்களின் உற்பத்திப் பொருட்களை  உலக சந்தைக்கு எடுத்துச் செல்லும் சங்கிலித் தொடர்பாக இருந்திடுங்கள்.

போல்பூர் மாவட்டத்தின் முக்கிய மையமாக விஸ்வ-பாரதி உள்ளது. அதன் பொருளாதார, கட்டமைப்பு சார்ந்த, கலாச்சார செயல்பாடுகளில் விஸ்வ-பாரதி பிணைந்துள்ளது. இங்குள்ள மக்கள் மற்றும் சமூகத்திற்கு அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டியதும் உங்களின் கடமையாகும்.

உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஒட்டுமொத்த மனிதகுலமும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக, முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். 21வது நூற்றாண்டில் இந்தியாவிற்கு உரிய இடத்தை கொண்டு போய் சேர்ப்பதில் நீங்கள் பெரிய சக்தியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுடன் சக பயணியாக இருப்பதாக நான் கருதிக் கொள்கிறேன். இந்தப் புனித மண்ணில் குருதேவ் தாகூரின் கல்வி நிலையத்தில் இருந்து படித்த அனைவரும் ஒன்று சேர்ந்து நடைபோடுவோம். உங்களுக்கு என் வாழ்த்துகள்.

நல்வாழ்த்துகள்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!

மிக்க நன்றி.



(Release ID: 1699903) Visitor Counter : 229