நித்தி ஆயோக்
இந்தியா-ஆஸ்திரேலியா சுழற்சி பொருளாதார தொழில்நுட்ப போட்டியின் (I-ACE) நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
Posted On:
19 FEB 2021 5:13PM by PIB Chennai
அடல் புதுமை திட்டம், நிதி ஆயோக், காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை ஆகியவை நடத்திய இந்தியா-ஆஸ்திரேலியா சுழற்சி பொருளாதார தொழில்நுட்ப போட்டி (I-ACE) இன்று நிறைவடைந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த தொழில்நுட்ப போட்டி கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 72 குழுவினர், 4 பிரிவு போட்டியில் பங்கேற்றனர்.
இன்று நடைப்பெற்ற இதன் நிறைவு நிகழ்ச்சியில், இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்கள் வீடியோ தகவல் மூலம் உரையாற்றி வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நமது நுகர்வு முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை எப்படி குறைப்பது என்பது பற்றியும் நாம் கவனிக்க வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
இது தொடர்பான நமது பல சவால்களுக்கு தீர்வு காண்பதில் சுழற்சி பொருளாதாரம் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.
மறு சுழற்சி, பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, கழிவுகளை அகற்றுவது, வளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது போன்றவை நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் கூறினார்.
இந்த தொழில்நுட்ப போட்டியில் காட்டப்பட்ட புதுமை கண்டுபிடிப்புகள், நமது இரு நாடுகளும், சுழற்சி பொருளாதார தீர்வுகளில் முன்னணி வகிக்க ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கருத்துக்களை வளர்ப்பதற்கான வழிகளை காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ‘‘பூமி தாய் வழங்கும் அனைத்துக்கும் நாம் உரிமையாளர்கள் இல்லை. ஆனால், வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் நாம் பாதுகாவலர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது’’ என பிரதமர் கூறினார்.
தொழில்நுட்ப போட்டியில் கலந்து கொண்ட இன்றைய இளம் பங்களிப்பாளர்களின் சக்தி மற்றும் உத்வேகம்தான், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான, முன்னோக்கு கூட்டுறவின் அடையாளம் என பிரதமர் கூறினார்.
‘‘கொவிட்டுக்கு பிந்தைய உலகை உருவாக்குவதில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வலுவான கூட்டுறவு முக்கிய பங்காற்றும். நமது இளைஞர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், தொடக்க நிறுவனங்கள் இந்த கூட்டுறவின் முன்னணியில் இருப்பர்’’ என பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699416
***
(Release ID: 1699506)