விவசாயத்துறை அமைச்சகம்

மேக் இன் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக உள்நாட்டு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கு 6788 பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 17 FEB 2021 2:23PM by PIB Chennai

பூச்சிகள், நோய்கள், களைகள், புழுக்கள், ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் வேளாண் பயிர்களின் தரத்திற்கும், விளைச்சலுக்கும் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கிலும், அந்நிய உயிரினங்களின் ஊடுருவல் மற்றும் பரவலில் இருந்து நமது உயிரி-பாதுகாப்பை காக்கவும், “தாவர பாதுகாப்பு மற்றும் தாவர தனிமைப்படுத்தலுக்கான துணை திட்டம்என்னும் திட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை, கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் மனித வள மேம்பாட்டு பணிகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மேற்கொள்கிறது.

வேளாண் ஏற்றுமதிகளுக்கான வசதிகளை உறுதி செய்வதற்காக 1200 பேக்கேஜிங் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், பதப்படுத்துதல் மையங்கள், சுத்திகரிப்பு வசதிகள், புகையூட்டும் முகமைகள் மற்றும் வருகைக்குப் பின் தனிமைப்படுத்தும் வசதிகள் ஆகியவற்றின் மறு சரிபார்ப்பு செய்யப்பட்டுவிட்டது.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் பூச்சிக்கொல்லிகளை திறமையான முறையில் கையாளுதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, 14 குறிப்பிட்ட பயிர் மற்றும் பூச்சி நடைமுறைகளின் தொகுப்பு பொது ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

மேக் இன் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக உள்நாட்டு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கு 6788 பதிவு சான்றிதழ்களும், பூச்சிக்கொல்லிகளின் ஏற்றுமதிக்காக 1011 பதிவு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒழுங்குமுறை செயல்பாட்டிற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை, அழிவை உண்டாக்கும் பூச்சி மற்றும் புழுக்கள் சட்டம், 1914, மற்றும் பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968 ஆகியவை வழங்குகின்றன.

2020-21-ஆம் ஆண்டில் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை முடிவு செய்த பின்னர் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஆளில்லாத குட்டி விமானங்களை பயன்படுத்திய முதல் நாடாக இந்தியா ஆனது.

***

 



(Release ID: 1698765) Visitor Counter : 236