பிரதமர் அலுவலகம்
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் 75வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
Posted On:
16 FEB 2021 5:33PM by PIB Chennai
நமஸ்காரம்.
ஸ்ரீராமச்சந்திரா மிஷன் 75வது ஆண்டு பூர்த்தி அடைவதை ஒட்டி உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை உருவாக்குவதிலும், சமூகத்தை உறுதியாக மேம்படுத்துவதிலும் 75 ஆண்டுகள் என்பது முக்கியமான மைல்கல்லாக உள்ளது. இந்த அமைப்பு 150-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளதற்கு உங்களுடைய அர்ப்பணிப்பு தான் காரணம். குரு ராம்சந்திரா அவர்களின் பிறந்த நாளை வசந்த பஞ்சமி புனித தருணத்தில் நாம் கொண்டாடுகிறோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதுடன் பாபுஜி அவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். கன்ஹா சாந்தி வனம் புதிய தலைமையகத்தில் உங்களுடைய அற்புதமான பணிகள் தொடர வாழ்த்துகிறேன். தரிசாகக் கிடந்த நிலத்தை நீங்கள் மேன்மைப்படுத்தியதாக அறிகிறேன். பாபுஜியின் போதனைகளுக்கு இந்த சாந்தி வனம் ஒளிரும் உதாரணமாக அமைந்துள்ளது.
நண்பர்களே,
வாழ்வின் முக்கியத்துவத்தை அறிதல், மன அமைதியை அடைவதற்கான அவருடைய முயற்சிகள் நம் அனைவருக்கும் பெரிய உத்வேகத்தைத் தருபவையாக உள்ளன. இன்றைய காலகட்டத்தில் வேகமான செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்களுக்கு நேரம் போதவில்லை. ஆன்மிகத்தின் மூலம் எளிதாக மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க நீங்கள் உதவுகிறீர்கள். யோகா மற்றும் தியானங்களை உங்களின் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பயிற்சியாளர்களும் உலகம் முழுக்க கற்பித்து வருகிறார்கள். `டா ஜி' என தியானம் மற்றும் ஆன்மிக உலகில் அறியப்பட்டவர் நமது கமலேஷ் ஜி அவர்கள். மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவின் சிறந்த அம்சங்களின் கூட்டுக் கலவையாக அவர் இருக்கிறார். உங்களுடைய ஆன்மிகத் தலைமையின் கீழ், ஸ்ரீராமச்சந்திர மிஷன், உலகம் முழுவதற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கற்றுத் தருவதாக உள்ளது.
நண்பர்களே,
இன்றைக்கு பெருந்தொற்று நோய்கள், பயங்கரவாதத்தால் ஏற்படும் மன அழுத்தப் பிரச்சினைகளில் உலகம் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழ்நிலையில் சகஜ மார்க்கம், மன நிறைவுப் பயிற்சி மற்றும் யோகாசனம் ஆகியவை உலகின் நம்பிக்கைக்கு தேவையான விஷயங்களாக உள்ளன. சமீப காலங்களில், சிறிதளவு கவனமாக இருந்தால் எப்படி பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்பதற்கான உதாரணங்களை நாம் பார்த்தோம். 130 கோடி இந்தியர்களின் விழிப்புணர்வால், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என உலகிற்குக் காட்ட முடிந்தது. இந்த செயல்பாட்டில் வீட்டு வைத்தியம் குறித்த அறிவு, வாழ்க்கை முறைகள், யோகா - ஆயுர்வேதம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன. கொரோனா வந்தபோது, இந்தியா குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்தன. ஆனால் மற்ற நாடுகளுக்கு இந்தியா உத்வேகம் அளித்து வருகிறது.
நண்பர்களே,
உலக நன்மைக்காக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்தியா கடைபிடிக்கிறது. உடல் நலன், வாழ்க்கை நலத் திட்டங்கள், சொத்து ஆகியவற்றின் சமச்சீரான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், உலகில் மிகப் பெரிய மக்கள் நலத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. ஏழைகளுக்கு கண்ணியமான, வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதே இவற்றின் இலக்காக உள்ளது. அனைவருக்கும் கழிப்பறை வசதி, புகையில்லா சமையலறை, அனைவருக்கும் வங்கி சேவைகள், அனைவருக்கும் வீடு போன்ற பல்வேறு திட்டங்கள் பெரும்பகுதி மக்களைத் தொடுபவையாக உள்ளன.
நண்பர்களே,
நலவாழ்வு என்பது நோய்களை குணமாக்குதல் என்பதையும் தாண்டியதாக உள்ளது என்பது நமது சிந்தனையாக உள்ளது. நோய்த் தடுப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமான மக்கள் பயன் பெறுகிறார்கள். மருந்துகள், மருத்துவ சாதனங்களின் விலைகள் குறந்துள்ளன. இளைஞர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதாக உடல்நலன் சார்ந்த திட்டங்கள் உள்ளன. வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அவர்களுக்கு வரக் கூடாது. கோவிட் 19-க்கு எதிரான மருந்துகள் உலக நாடுகளுக்குத் தேவைப்பட்டபோது, அவற்றை இந்தியா அனுப்பி வருகிறது. உலக அளவில் தடுப்பூசி மருந்துகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது.
நண்பர்களே,
கொரோனாவுக்குப் பிந்தை உலகில், யோகா மற்றும் தியானம் குறித்த கவனம் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. பகவத் கீதையில் : सिद्ध्य सिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, முழுமை நிலை மற்றும் தோல்வியை சமமாகப் பாவித்து, யோகாசனத்தில் மூழ்கி கடமைகளை செய்திடு என்பதாகும். எல்லாவற்றையும் சமமாகப் பாவித்தல் தான் யோகா. யோகாவுடன் தியானமும் சேருவதுதான் இன்றைய உலகிற்கான தேவையாக உள்ளது. மனித வாழ்வில் மன அழுத்தம் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது என்று பெரிய நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த வகையில் நீங்கள் அரும்பணி ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நண்பர்களே,
வேதங்கள் यथा दयोश् च, पृथिवी च, न बिभीतो, न रिष्यतः। एवा मे प्राण मा विभेः என்று கூறுகின்றன. அதாவது, சொர்க்கம் மற்றும் பூமியைப் போல எதுவும் அச்சப்படுத்தும் வகையிலோ, அழிவதாகவே இல்லை, என் ஆன்மாவே! நீயும் அச்சமின்றி இருந்திடு. பிணைப்புகள் இல்லாதவர் தான் அச்சமின்றி இருக்க முடியும். சகஜ மார்க்கத்தை பின்பற்றுவதன் மூலம் மக்கள் வாழ்க்கை அளவிலும், மனதளவிலும் நெருக்குதல்கள் இல்லாமல் இருக்கும் வாய்ப்பை நீங்கள் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நோய்கள் இல்லாத, மனதளவில் அதிகாரம் பெற்ற குடிமக்கள் இந்தியவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வார்கள். இந்த ஆண்டு நமது நாடு சுதந்திரம் பெற்றதன் 75 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். உங்கள் முயற்சிகள், நாட்டை முன்னெடுத்துச் செல்லட்டும்! இந்த விருப்ப லட்சியங்களை தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் அனைருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
*****************
(Release ID: 1698757)
Visitor Counter : 244
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam