நித்தி ஆயோக்
இந்தியா-ஆஸ்திரேலியோ மறுசுழற்சி பொருளாதார போட்டி தொடக்கம்
Posted On:
11 FEB 2021 4:34PM by PIB Chennai
புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம், நாட்டின் பொது பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ‘இந்தியா-ஆஸ்திரேலியா மறுசுழற்சி பொருளாதாரம்(ஐ-ஏசிஇ)’ போட்டியை அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை ஆகியவை தொடங்கின.
கழிவுகளை அகற்றுவதையும், ஒரு பொருளை சுழற்சி முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதையும் நோக்கமாக கொண்டதுதான் மறு சுழற்சி பொருளாதாரம்.
இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான போட்டியை நடத்த வேண்டும் என இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களி்ன இருதரப்பு உச்சி மாநாடு கடந்தாண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைப்பெற்ற போது முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அறிவிக்கப்பட்ட போட்டியில், இரு நாடுகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தீவிர பரிசீலனைக்குப்பின் 80 விண்ணப்பதாரர்கள் இரு தரப்பு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப் போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள், மறுசுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதுமையான வழிகளை கண்டறிவர்.
காணொலி காட்சி மூலம் நடந்த இதன் தொடக்க விழாவில் பேசிய ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமையின் இயக்குனர் திரு நிக் பகெட், ‘‘ இந்த மறுசுழற்சி பொருளாதார போட்டியின் கருப்பொருளானது ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியமானது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அடல் புதுமை கண்டுபிடிப்பு திட்டத்தின் கூடுதல் செயலாளர் திரு ஆர். ரமணன், ‘‘ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான யோசனைகளின் பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் எல்லைக்கடந்த பயன்பாடுகள் ஆகியவை காலத்தின் தேவை.
உணவு, பால் பொருட்கள், மின் -கழிவு பொருட்கள் துறையில், தயாரிப்பு பொருட்கள், துணை பொருட்கள், உபயோகத்துக்கு பிந்தைய பயன்பாடு ஆகியவற்றில் மறு சுழற்சி குறித்து ஆராயப்பட வேண்டும்’’ என்றார்.
இதன் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றியாளர்களை இரு நாடுகளைச் சேர்ந்த நடுவர் குழுவினர் தேர்வு செய்வர். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.56 லட்சம்.
வெற்றியாளர்கள், இரு நாட்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697115
-----
(Release ID: 1697255)
Visitor Counter : 195