குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சாமானியர்களுக்கான வீடுகளை கட்டும் போது தரம் மற்றும் மலிவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் : குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 10 FEB 2021 5:31PM by PIB Chennai

நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகளை மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்(சிஎஸ்ஐஆர்) மத்திய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் (சிபிஆர்ஐ) 70ம் ஆண்டு விழாவை  குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

நகரமயமாக்கல் அதிகரித்து வருவது வீடுகளின் தேவையை அதிகரித்துள்ளது. நெரிசலான பகுதியில் ஒரு குடும்பம் வசிக்கும் போது, அங்கு காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம் இருப்பதில்லை. இது அவர்களின் நலனை பாதிக்கிறது. காற்றோட்டம், சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை கொரோனா தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது.

அதனால் கட்டிடக் கலைஞர்கள், இது போன்ற வசதிகளுடன் வீடுகளை கட்டுவதை உறுதி செய்ய வேண்டும்காற்றோட்டம், சூரிய வெளிச்சம் உள்ள  கட்டிட திட்டங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கட்டுமானத்தில் பசுமைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். செங்கல், மரம், சிமென்ட், எஃகு மற்றும் மணல் போன்ற வழக்கமான கட்டுமான பொருட்களுக்கு எல்லாம் அதிக ஆற்றல் தேவைப்படுவதாக உள்ளது. அதனால் உள்ளூரில் கிடைக்கும் பசுமைப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை கட்ட வேண்டும். மறு சுழற்சி, மறு பயன்பாட்டு பொருட்களே  கட்டிட பொறியாளர்களின் மந்திரமாக இருக்க வேண்டும். மின் உற்பத்தி மையங்களின் சாம்பல் கழிவுகளால் செய்யப்படும் மாற்று பொருட்களை கட்டுமானங்களில் பயன்படுத்த வேண்டும்.

இயற்கை பேரிடர்களை தாங்கும் விதத்தில், புதிய விதிமுறைகளை கட்டுமான முறைகளில் பின்பற்ற வேண்டும்

இவ்வாறு திரு. வெங்கயைா நாயுடு பேசினார்.

சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மையத்தின் சூடோ டைனமிக் ஆய்வு மையம், இமாச்சலப் பிரதேசத்தில் தற்காலிக மருத்துவமனைகள் ஆகியவற்றையும் காணொலி காட்சி மூலம் குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

----

(Release ID: 1696819)


 



(Release ID: 1696889) Visitor Counter : 125