தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
51-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா: 1970கள் இந்தி திரைத்துறையின் பொற்காலம் - இயக்குநர் திரு ராகுல் ரவாயில்
கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் வெளியான அதிரடி இந்தி திரைப்படங்களில் ஏராளமான புதிய சிந்தனைகளும், புதிய முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. பொன்னான காலங்களான அந்தக் காலகட்டத்தில் திரைப்படத்துறையில் வழக்கத்திற்கு மாறான, புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஏற்பட்டதாக பிரபல திரைப்பட இயக்குநர் திரு ராகுல் ரவாயில் தெரிவித்துள்ளார்.
51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் ஒரு பகுதியாக “50, 60, 70-ஆம் ஆண்டுகளில் திரைப்பட உருவாக்கம்” என்ற தலைப்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தித் திரைப்படத் துறையின் பரிணாம வளர்ச்சி குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு எடுத்துரைத்தார்.
“இந்தத் துறையில் 1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் நுழைந்த நான் புகழ்பெற்ற திரு ராஜ் கபூருக்கு உதவியாளராக எனது பணியைத் துவக்கினேன். திரு கே ஆசிஃப், திரு மெஹ்மூத் போன்ற தலை சிறந்த படைப்பாளிகள், பிரம்மாண்டமான அரங்குகளில் 1960களில் திரைப்படங்களை உருவாக்கினார்கள். அதற்குப் பிறகு 1970களில் வெளியான திரு பாபுராம் இஷாராவின் ‘சேத்னா’ திரைப்படம் 25-30 நாட்கள் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இது போன்று வெளி இடங்களில் படப்பிடிப்பை நடத்துவது அன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதான செயல்” என்று தமது திரைப்படப் பயணத்தை நினைவு கூர்கையில் திரு ராகுல் ரவாயில் கூறினார்.
கடந்த 70, 80-ஆம் ஆண்டுகளில்தான் திரைப்படத் துறை பெரும் வளர்ச்சியை சந்தித்ததாகவும், எனினும் அது இன்றும் வளர்ந்து வருவதாகவும் திரு ரவாயில் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689672
******
(Release ID: 1689719)
Visitor Counter : 216