அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ரத்த குழாய்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட், இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

Posted On: 17 JAN 2021 12:28PM by PIB Chennai

மூளைக்கு ரத்தத்தை முறையாக செலுத்துவதற்கு பலூனிங் என்ற முறையின் வாயிலாக ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதில் ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட் கருவியையும், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை குணப்படுத்துவதற்கான கருவியையும் இந்தியர்கள் விரைவில் பெறவிருக்கிறார்கள்.

இதயத்தில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்துவதற்கு தற்போது வெளிநாட்டுகளிலிருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டென்ட் கருவியின் விலை இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட மிகவும் குறைவானதாக இருக்கும். இதேபோல் ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் போது ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்துவதற்கான கருவி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னார்வ நிறுவனமாக இயங்கும்  ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய விண்வெளி ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்ஏஎல்), பெங்களூருவுடன் இணைந்து தயாரித்த இரண்டு உயிரி மருத்துவ உட்பொருத்து கருவிகளுக்காக அந்த நிறுவனம் புனேவில் இயங்கும் பயோராட் மெடிசிஸ் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களில் சிஎஸ்ஐஆர்-என்ஏஎல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜிதேந்திர ஜே ஜாதவ் முன்னிலையில் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே ஜெயக்குமார், பயோராட் மெடிசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு ஜிதேந்திர ஹெட்ஜ் ஆகியோர் தொழில்நுட்ப மாற்ற ஒப்பந்தங்களில் இந்த வார துவக்கத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689298

------



(Release ID: 1689430) Visitor Counter : 165