வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் புத்தாண்டுப் பரிசு - சர்வதேச அளவில் சிறந்த மற்றும் புதிய கட்டிடத் தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தும் புதிய யுகத்தின் தொடக்கம்
ஆறு கலங்கரை விளக்கத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்- பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்) விருதுகளை வழங்கினார்
இந்தூர், ராஜ்கோட், சென்னை, ராஞ்சி, அகர்தாலா மற்றும் லக்னோவில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கத் திட்டங்கள் தொடக்கம்
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் 1.09 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் - 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமானம் பல்வேறு நிலைகளில் உள்ளன - சுமார் 40 இலட்சம் வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுவிட்டன
‘நவரித்’ புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வி தொடக்கம்
Posted On:
01 JAN 2021 2:52PM by PIB Chennai
சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் - இந்தியா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, ஆறு மாநிலங்களில் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாட்டினார். கட்டிடத் தொழில்நுட்பத்தில் புதிய யுகத்தின் தொடக்கத்திற்கு இந்த முன்னெடுப்பு வழிவகுக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் - நகர்புறம் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளை ஆறு பிரிவுகளில் பிரதமர் வழங்கினார்.
நாடு முழுவதிலும் இருந்து 88 பயனாளிகள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, கலங்கரை விளக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆறு மாநிலங்களான திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வர்கள் இதில் பங்கேற்றனர்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் வீட்டு வசதித் திட்டம் - நகர்புறம் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு அறிவித்தது.
மக்களையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் கலங்கரை விளக்கத் திட்டங்கள், குறைந்த செலவில், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் விரைவாக வீடுகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான சூழலியலை உருவாக்கும். நீடித்து நிலைத்திருத்தல், பருவகால மாற்றங்களைத் தாங்குதல், குறைந்த செலவு, பாதுகாப்பு மற்றும் விரைவான கட்டுமானம் ஆகியவை கலங்கரை விளக்கத் திட்டங்களின் பல்வேறு நன்மைகளில் முக்கியமானவையாகும். 2022-க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி என்னும் பிரதமரின் இலக்கை எட்டுவதற்கு இந்தத் தொழில்நுட்பப் புரட்சி உதவும். சிறந்த மற்றும் மாற்று சர்வதேசத் தொழில்நுட்பப் புதுமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேகமாக நகர்மயமாகி வரும் இந்தியாவின் கட்டுமானத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர், குஜராத்தில் உள்ள ராஜ்கோட், தமிழ்நாட்டில் சென்னை, ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சவாலின் மூலம் மாநிலங்கள்/நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டுமானத்திற்குத் தயாராக இத்திட்டங்கள் உள்ளன. சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் - இந்தியா, 2019-இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 தொழில்நுட்பங்களில் இருந்து ஆறு சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் தலா சுமார் 1,000 வீடுகள் கலங்கரை விளக்கத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ளன.
“2022-க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி என்னும் மாண்புமிகு பிரதமரின் இலக்கை எட்டுவதற்கு கலங்கரை விளக்கத் திட்டங்கள் பெரிய அளவில் உந்துசக்தியாகத் திகழும். அரசின் தற்சார்பு இந்தியா இலட்சியத்தைச் சார்ந்து சிறந்த சர்வதேசத் தொழில்நுட்பப் புதுமைகள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685349
************
(Release ID: 1685392)
Visitor Counter : 234