மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-ஐ வழங்கினார் குடியரசுத் தலைவர். தமிழகத்திற்கு இரண்டாவது இடம்

Posted On: 30 DEC 2020 4:50PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-இல் மின் ஆளுகையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.  மின்னணு இந்தியா விருதுகள் 2020-ஐ காணொலி வாயிலாக குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், செயலாளர் திரு. அஜய் சாவ்னே, சிறப்புச் செயலாளரும் நிதி ஆலோசகருமான திருமிகு. ஜோதி அரோரா, கூடுதல் செயலாளர் டாக்டர். ராஜேந்திர குமார், தேசியத் தகவலியல் மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர். நீதா வர்மா மற்றும் மத்திய, மாநில, மாவட்ட அலுவலகங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், இந்தியாவை மின்னணுத் துறையில் திறன்மிக்க சக்தியாக மாற்றவும், குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து அதன் மூலம் அவர்கள் மேம்படவும் அரசு கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையை மின்னணு இந்தியா விருதுகள் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார். கொரோனா தொற்றின் காரணமாக சமூக உறவு, பொருளாதார நடவடிக்கைகள், சுகாதாரம், கல்வி மற்றும் பல்வேறு அம்சங்கள் உலகளவில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகளால் எழுந்த தாக்கத்தைக் குறைப்பதற்கு இந்தியா தன்னைத் தயார்படுத்திக் கொண்டதோடு, நெருக்கடியை வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியது. அண்மைக் காலங்களில் நாட்டின் மின்னணு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டதால் இது சாத்தியமானது”, என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஒரு பொத்தானை அழுத்தியவுடன் நிதி கிடைக்கும் வகையில், பாகுபாடின்றி  மின்னணு இந்தியா அனைவரையும் சென்று அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவின் தொலைவான பகுதிகள், வங்கிகள், ஏடிஎம் சேவைகள் இல்லாத இடங்களில் வாழும் ஏழை மக்களும் பயனடையும் வகையில் ஆதார் மூலமாக பணப்பரிமாற்றம் மேற்கொண்ட தபால்துறை ஊழியர்கள் போன்ற போராளிகளை அமைச்சர் பாராட்டினார்.

மின் ஆளுகையின் மூலம் சிறந்த சேவைகளை வழங்கிய அரசின் திட்டங்கள், அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள், மாவட்டங்கள் என ஏழு பிரிவுகளில் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பட்டன. பெருந்தொற்று காலத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்னும் பிரிவில் தொலை மருத்துவச் சேவை, கோவிட்-19 மாதிரி சேகரிப்பு மேலாண்மை முறை உள்ளிட்ட நான்கு முன்முயற்சிகள் வெற்றி பெற்றன. சிறந்த மின் ஆளுகையை வழங்கிய மத்திய அமைச்சகம்/ துறைகள் என்னும் பிரிவுக்கான விருதுகள் நீதித்துறையின் உச்சநீதிமன்ற மின் குழு, தபால்துறை, உரங்கள் துறை மற்றும் நில வளங்கள் துறை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டன. ஹரியானா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சிறந்த மின் ஆளுகைக்கான மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. ஆரோக்கிய சேது மற்றும் மின் அலுவலகம் ஆகியவற்றிற்கு நடுவர் தேர்வு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684660

**********************



(Release ID: 1684810) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi , Marathi