அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020: நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக ஊடகங்கள், இளைஞர்களின் பங்களிப்பு

Posted On: 24 DEC 2020 4:55PM by PIB Chennai

நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊடக மாநாடு' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ந்துவரும் மின்னணு ஊடகம் மற்றும் அதன் பரிமாணங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த மாநாட்டின் துவக்க விழாவில் அறிவியல் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அறிவியல் மற்றும் ஊடகத்தின் அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

மின்னணு வழியாக அறிவியல் தொடர்புக்கு உகந்த ஆண்டாக பெருந்தொற்றுப் பரவல் காலகட்டம் அமைந்ததாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் இந்த மாநாடு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் முதன்மை உரையாற்றிய பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு சசி எஸ். வெம்பட்டி, பெருவாரியான மக்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்ப்பதில் குறுகிய கால காட்சிப் படங்கள் பெரும் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது  மிகப் பெரும் சவாலாக உள்ளது என்று அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநர் டாக்டர். சேகர் சி மாண்டே கூறியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் பங்கு குறித்து டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020- கடந்த 22-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்த பின், நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் பங்கு குறித்து உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்றது.

வளமான பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நமது நாடு பெற்றுள்ளது. இந்தத் துறைகளில் நாம் அடைந்திருக்கும் சாதனை அபரிமிதமானது. நாம் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்காற்றியுள்ளதுஎன்று அவர் கூறினார்.

இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதில் புதிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும் என்று கூறிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மாநில மொழிகளின் வாயிலாக பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் வாயிலாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறிய வயதில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதன் மூலம் அறிவியல் உணர்ச்சியை தூண்டுவதுடன், தரமான ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆலோசகர் டாக்டர். அகிலேஷ் குப்தா தெரிவித்தார்.

 

விஞ்ஞான பாரதி அமைப்பின் தேசிய நிர்வாகச் செயலாளர் திரு. ஜெயந்த் சகஸ்ரபுத்தே, தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை அடைவதில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683331

-----


(Release ID: 1683449) Visitor Counter : 472


Read this release in: English , Urdu , Hindi , Telugu