பாதுகாப்பு அமைச்சகம்
கொச்சியிலிருந்து ஆண்ட்ரோத் தீவுக்கு, ஐஎன்எஸ்வி புல்புல் பாய்மரப் படகில் கடற்படைக் குழுவினர் சாகசப் பயணம் (23-28 டிசம்பர் 20)
Posted On:
24 DEC 2020 2:40PM by PIB Chennai
கொச்சியிலிருந்து, லட்சத்தீவுப் பகுதியில் உள்ள ஆண்ட்ரோத் தீவுக்கு பாய்மரப் படகில் சென்று திரும்பும் சாகசப் பயணத்தை, கொச்சியில் உள்ள கடற்படைக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இளம் கடற்படை வீரர்களிடையே, சாகச உணர்வை வளர்ப்பது, கடல்சார் திறன்களை வளர்த்துக் கொள்வது மற்றும் கடலில் பாய்மரப் படகுப் பயணத்தை வளர்ப்பது ஆகியவை இந்தப் பயணத்தின் நோக்கம் ஆகும்.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும், இந்தியக் கடற்படையின் பாய்மரப் படகு புல்புல்-ஐ கொச்சி கடற்படைத் தளத்திலிருந்து 2020 டிசம்பர் 23ஆம் தேதி அன்று தென்மண்டலக் கடற்படையின் ரியர் அட்மிரல் அந்தோணி சார்ஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஐஎன்எஸ்வி புல்புல், பாய்மரப் படகு மேக் இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள அல்ட்ரா மரைன் படகு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த புல்புல் படகுக் குழுவில் கேப்டன் அதுல் சின்ஹா தலைமையில் ஆறு பேர் உள்ளனர். அதுல் சின்ஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர். 22,000 நாட்டிக்கல் மைல் கடல் பயண அனுபவம் கொண்டவர். மற்ற 5 பேரில் 2 பேர் கடற்படைப் பெண் அதிகாரிகள். இந்தப் படகுப் பயணத்தில், பெண் அதிகாரிகளை ஊக்குவிப்பதற்காக, தென் மண்டலக் கடற்படையின் மருத்துவ அதிகாரி ரியர் அட்மிரல் ஆர்த்தி சரீன், தானாக முன்வந்து இந்தக் கடல் பயணத்தில் கலந்து கொண்டார். இவர் தான் இந்தக் குழுவில் மூத்த அதிகாரி. மற்றொரு பெண் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் துலிகா கோட்னலா. இவர் கடற்பயணத்தில் நிபுணர். வங்காள விரிகுடாவில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட 4500 நாட்டிக்கல் மீட்டர் தூர கடற்பயணத்தில் இவர் பங்கேற்றார். இவர்கள் தவிர கேப்டன் சரண், சப் லெப்டினன்ட் அவிரல் கேசவ், ஓஜாஸ் குல்கர்னி ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர். கடலில் 400 நாட்டிக்கல் மைல் தூரம் கடந்து, இந்த சாகசப் பயணம் கொச்சியில் டிசம்பர் 28ஆம் தேதி முடிவடைகிறது.
----
(Release ID: 1683367)
Visitor Counter : 166