அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், திருமதி ஸ்மிருதி இராணி வலியுறுத்தல்

Posted On: 23 DEC 2020 6:22PM by PIB Chennai

தற்சார்பு இந்தியாவை உருவாக்க பாலின வேறுபாட்டை களைந்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல்பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு' நடைபெற்றது. தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன், ஜவுளி அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி ஆகியோர் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை அடைவதற்கு பெண்களின் பங்கு மிகவும் முக்கியம் என்று கூறினார். அறிவியல் மற்றும் தொழில்துறையில் இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் வேலைவாய்ப்பு சூழலை மாற்றி அமைக்கும் திறமை பெண்களிடம் இருப்பதாகத் தெரிவித்தார். பெண்களால் நடத்தப்படும்  தொழில் நிறுவனங்கள், புதிதாக 150 முதல் 170 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருப்பதாக அவர் கூறினார். பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையையும் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், இந்த எண்ணிக்கையை  அதிகரிப்பதற்காகவும், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுவதாகக் கூறினார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள், அறிவியல், தொழில்நுட்பம், தொழில் முனைவு போன்ற துறைகளில் பெண்கள் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆரோக்கிய மாநாடு என்னும் பிரிவில் ஆயுர்திருவிழா என்னும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், தினசரி வாழ்க்கையில் எளிதான மற்றும் ஆரோக்கியமான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், மன உளைச்சலைக் குறைத்து, நேர்மறையான சமூக விவாதங்கள் மற்றும் ஆரோக்கியத்தை நாம் வளர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683057

------



(Release ID: 1683108) Visitor Counter : 875


Read this release in: English , Urdu , Punjabi