வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை அடைய முழுமையான அணுகுமுறை அவசியம்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி
प्रविष्टि तिथि:
15 DEC 2020 3:13PM by PIB Chennai
இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை அடையவும் அதே வேளையில் நிலைத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளவும் முழுமையான அணுகுமுறை அவசியம் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி வலியுறுத்தியுள்ளார். 12-வது க்ரிஹா காணொலி உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
பெருகிவரும் நகரமயமாக்கலினால் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதுடன் எதிர்கால தலைமுறையினரின் தேவைகளை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பு நகரங்களின் முன் இருப்பதாக அவர் தெரிவித்தார். நகரங்களில் உள்ள உலகத் தரத்திலான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் பெருந்தொற்று போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நமக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன என்று கூறிய அமைச்சர், வீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஏராளமான கட்டுமான தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
கட்டுமான தொழில்நுட்ப ஆண்டை (2019-2020) முன்னிட்டு சர்வதேச வீடுகள் தொழில்நுட்ப சவால்- இந்தியா என்னும் நிகழ்ச்சியில் ‘ஆறு இலகுவான வீடு' திட்டத்திற்காக பங்கேற்ற 54 தொழில்நுட்பங்களில் ஆறு புதுமையான தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். தமிழகத்தின் சென்னை, மத்திய பிரதேசத்தின் இந்தோர், குஜராத்தின் ராஜ்கோட், ஜார்கண்டின் ராஞ்சி, திரிபுராவின் அகர்தலா, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ ஆகிய 6 இடங்களில் தலா 1000 வீடுகள் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, க்ரிஹா குழுவின் சஞ்சிகை மற்றும் புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680763
(रिलीज़ आईडी: 1680905)
आगंतुक पटल : 297