குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அரசியலமைப்பை விட உயர்ந்தது எதுவும் இல்லை: குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
25 NOV 2020 4:14PM by PIB Chennai
அரசியலமைப்பை விட உயர்ந்தது எதுவும் இல்லை எனவும், அரசின் 3 அங்கங்களான பேரவை , நிர்வாகம், நீதித்துறை ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல் பட வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு கூறினார்.
குஜராத் கெவாடியாவில் நடந்த, அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை தலைவர்களின் 80வது கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:
அரசின் மூன்று அங்கங்களான பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்காக இணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் செயல்பட வேண்டும். இந்த மூன்று அங்கங்களும், மற்றவற்றின் களத்தில் அத்துமீறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன.
பேரவைத் தலைவர்கள், ஜனநாயக கோயிலின் மிக உயர்ந்த பூசாரிகள். அவர்கள் இந்த ஜனநாயக கோயில்களின் புனிதத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். பேரவைகள் ஜனநாயகத்தின் தூண்கள். அவைதான் நிர்வாகம் மற்றும் நீதித்துறை செயல்பாடுகளுக்கு அடித்தளம் அமைக்கின்றன. சமீப ஆண்டு காலமாக மக்களின் கருத்துக்கள், சட்ட அமைப்புகளுக்கும், சட்டத்தை இயற்றுபவர்களுக்கும் எதிராக திரும்பி கொண்டிருக்கின்றன. அவையில் நடைபெறும் இடையூறுகள், அவைக்கும் உள்ளேயும், வெளியேயும் மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைகள், குற்ற பின்னணிகள், தேர்தலில் பண பலம் அதிகரிப்பு ஆகியவைதான் மக்களின் எதிர்மறையான கருத்துக்கு காரணங்கள்.
மாநிலங்களவையில் கேள்வி நேரம் மதியம் 12 மணிக்கு மாற்றப்பட்டும், இடையூறு காரணமாக கேள்வி நேரம் வீணாகிறது. விவாதம், ஆலோசனை, தீர்மானம் ஆகியவற்றால்தான் ஜனநாயக கோயில்களின் கண்ணியம், புனிததன்மை, கவுரவத்தை காக்க முடியும்.
அரசின் மூன்று அங்கங்களான பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தங்களின் லட்சுமண ரேகையை தாண்டி மற்றவரின் களத்தில் அத்துமீறாமல், இணக்கத்துடன் செயல்பட வேண்டும்.
நீதித்துறைதான் மிகச் சிறந்த நிர்வாகம் அல்லது சிறந்த சட்ட அமைப்பு என கருதுவது விரும்பத்தக்கது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675631
*******************
(Release ID: 1675729)
Visitor Counter : 255