சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

புதுக்கோட்டையில் சுமார் 1400 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கும் முகாமை மத்திய அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 24 NOV 2020 4:57PM by PIB Chennai

புதுக்கோட்டையில் 1398 மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கான முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் காணொலி வாயிலாக இன்று தொடங்கிவைத்தார். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ் திருநாவுக்கரசர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி தமது அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு காணொலி வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கி வருகின்றது. இதுபோன்ற முகாம்களின் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 10 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்க தமது அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் அவர்கள் தன்னிறைவு பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ரூ. 117 லட்சம் மதிப்புள்ள 2547 உதவி உபகரணங்கள், 1398 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. புதுக்கோட்டையில் உள்ள 9 வட்டாரங்களில் இவை அளிக்கப்பட்டன.

துவக்க விழாவில் ரூ. 24.8 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருட்கள், புதுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கைகளால் இயக்கப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகள் 4, 11 சக்கர நாற்காலிகள், 4 கைத்தடிகள், 20 காது கேட்கும் கருவிகள் உட்பட 131 உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை நிர்வாகத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொவிட் நடத்தைமுறைகளைப் பின்பற்றி இந்த முகாம் நடைபெற்றது.

கைகளால் இயக்கும் மூன்று சக்கர மிதி வண்டிகள் 76, 301 சக்கர நாற்காலிகள், 124 கைத்தடிகள், ஒரு பிரெய்லி கிட், ஒரு பிரெய்லி பலகை, 502 காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை பல்வேறு கட்டங்களாக 9 வட்டாரங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675331

----(Release ID: 1675384) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi , Punjabi