சுற்றுலா அமைச்சகம்

எனது தேசத்தைப் பார் இணைய கருத்தரங்குத் தொடரில் “சென்னையின் கதைகள்”

Posted On: 07 NOV 2020 9:00PM by PIB Chennai

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றிய முன்னோடி நகரம். வண்ணமயமான கோவில்கள், இன்றளவும் தன்னகத்தே பாதுகாத்து வரும் பிரம்மாண்ட ஆங்கிலேயர் காலத்து  கட்டிடங்கள். பரபரப்பு குறையாத சந்தைகள், பாரம்பரியத்தை பறைசாற்றும் இசை மற்றும் நாட்டியம். இத்தனைப் பெருமைகளையும் கொண்ட சென்னை குறித்து மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் எனது தேசத்தை பார் என்ற இணைய கருத்தரங்கு தொடர் அமைந்திருந்தது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடைபெறும் எனது தேசத்தை பார் என்ற இணைய கருத்தரங்கு தொடரில் சென்னையின் கதைகள் என்ற தலைப்பில் 2020,  நவம்பர் 7 அன்று கருத்தரங்கு  நடைபெற்றது.

ஸ்டோரிடிரெயில்ஸ் என்ற தனியார் சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த திருமதி அகிலா ராமன் மற்றும் அதன் நிறுவனர் திரு விஜய் பிரபாத் கமலகரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மையமாகவும் அதேசமயம்  பாரம்பரிய கலாச்சாரத்தையும் போற்றும் நகரமாக விளங்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, கடந்த 1996 வரை தனது பழைய பெயரான மதராஸ் என்றே அழைக்கப்பட்டது. வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் தென் இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமாகத் திகழ்கிறது.

கடந்த 1639-ஆம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்கள், அன்று ஆட்சி புரிந்து வந்த திரு தமர்லா முடிராசா சென்னப்ப நாயக்கடு என்பவரிடம் இருந்து நிலத்தை வாங்கியதால் அவரது பெயரான சென்னையே இந்த நகரத்திற்கு சூட்டப்பட்டது. மதராஸ் என்பது அப்போதைய வழக்கு மொழியாகவும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னால் பயன்படுத்தப் பட்டது. 1367-ஆம் ஆண்டு விஜயநகர கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள மதராசபட்டினம் துறைமுகம் என்பது தற்போதைய ராயபுரம் மீன்பிடி துறைமுகமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் என்பது கடந்த 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டையின் அருகில் அப்போது செயல்பட்ட ஓர் மீன்பிடி கிராமத்தின் பெயரான மதராசப் பட்டினத்தில் இருந்து மதராஸ் என்ற பெயர் வந்திருக்கக் கூடும் என்ற மற்றொரு தரப்பினரின் கூற்றும் இந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

மேலும் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தின் போது புனித மேரி தேவாலயத்தை குறிக்கும் வகையில்  கடவுளின் தாய் என்ற பொருள் கொண்ட மாத்ரே தே தியோ என்ற வார்த்தையில் இருந்து மதராஸ் வந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

17வது நூற்றாண்டின் நிகழ்வுகளை நினைவு கூறுகையில் கடந்த 1600-ஆவது ஆண்டு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட மேதகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அன்றைய பம்பாயை தொடர்ந்து மதராஸ் என்று அழைக்கக் கூடிய பகுதியில் வாணிபம் செய்வதற்காக கப்பல்களில் வந்து இறங்கினர். புனித ஜார்ஜ் கோட்டையை உருவாக்கி அதை வெள்ளை நகரம் என்றும் நகரின் இதர பகுதிகளை கருப்பர் நகரம் என்றும் அழைக்கச் செய்தனர். அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி பீடமாக புனித ஜார்ஜ் கோட்டை  திகழ்கிறது.

ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தின் மூன்று ஆண்டுகால ஆட்சி எப்படி இருந்தது என்றும் , ஆளுநர் எலிஹு யேல் என்பவரால் இன்றைய யேல் பல்கலைக்கழகம் உருவானது குறித்தும் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் காலத்தைவிட மிகவும் பழமைவாய்ந்த பெருமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு உண்டு. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானியர்களுக்குப் பரிச்சயமான இந்த பகுதி குறித்து மார்க்கோ போலோ இங்கு கடந்த 1292- ஆம் ஆண்டு வந்திருந்தது குறித்து எழுதியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு 1522 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் வந்தனர்.

புகழ்பெற்ற சிவ ஸ்தலமான கபாலீஸ்வரர் கோவிலின் பிரம்மாண்ட தெப்பக்குளமும் கோவிலின் உள்ளே கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமும் வழக்கங்களும் அயல்நாட்டவரையும் கவரும் வகையில் உள்ளன. இதனருகே வெள்ளை நிறத்தில் உயர்ந்து நிற்கிறது சாந்தோம் தேவாலயம். இங்குதான் ஏசுவின் சீடர் என்று அழைக்கப்பட்ட செயின்ட் தாமஸ் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பரத நாட்டியத்தைப் பயிற்றுவிக்கும் உலகப் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா நாட்டிய பள்ளி குறித்த வரலாறும் இந்த கருத்தரங்கில் இடம் பெற்றது. பழம்பெரும் பரதக் கலையை ஊக்குவிக்க திருமதி ருக்மணி தேவி அருண்டேல் சொந்த முயற்சியில் பரத பள்ளி தொடங்கப்பட்டு இன்றுவரை உலகப் பிரசித்தி பெற்று இயங்கி வருகிறது.

            மெரீனா கடற்கரையின் எதிரில் பிரமாண்டமாக நிற்கும் விவேகானந்தர் இல்லம் என்று இன்று அழைக்கப்படக்கூடிய கட்டிடம் அன்றைய நாளில் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. பிரெட்ரிக் டியூட்டர் என்ற அமெரிக்க இளம் தொழில் அதிபர் கல்கத்தா பம்பாய் மற்றும் மதராஸ் நகரங்களுக்கு ஐஸ்கட்டிகளை கொண்டுவந்து அவற்றை பாதுகாப்பதற்காக சென்னையில் மூன்று கட்டிடங்களை நிறுவினார். அவற்றில் ஒன்றுதான் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை விளக்கும் அருங்காட்சியம் இங்கு அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் விவேகானந்தர் குறுகியகாலம் தங்கி இருந்தார்.

இறுதியாக இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் என்று அழைக்கக்கூடிய எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள அமராவதி பளிங்குக் கற்களின் வரலாறு கூறப்பட்டது. இந்தக் கற்கள், புத்தக் கலையின் மிகப்பழமையான மற்றும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்தவையாகும்இந்தப் பளிங்கு கற்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் பெரும்பாலும் கௌதம புத்தரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளதன.

இவை தவிர சென்னை நகரத்தில் பிரசித்தி பெற்ற உணவு வகைகளான இட்லி, தோசை, வடை, சாம்பார், செட்டிநாடு உணவுகள் பற்றியும், எண்ணெய் குளியல், புத்தாடைகள், இனிப்பு பலகாரங்களுடன் தீபாவளிப் பண்டிகை எவ்வாறு பாரம்பரிய முறையில் இங்கு கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் கருத்தரங்கின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671182

------



(Release ID: 1671224) Visitor Counter : 277


Read this release in: English , Urdu , Bengali