ஜல்சக்தி அமைச்சகம்
நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் பாதுகாப்புக்காக பணியாற்றியவர்களுக்கு தேசிய தண்ணீர் விருதுகள்
Posted On:
06 NOV 2020 5:21PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் வளங்கள், ஆறுகளின் மேலாண்மை மற்றும் கங்கையை புதுப்பித்தல் துறையின் சார்பாக இரண்டாவது தேசிய தண்ணீர் விருதுகள் 2019, வரும் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் காணொலி வாயிலாக வழங்கப்படும்.
நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், அதனை முறையாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
முதல் நாளான 11-ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைத்து, விருதுகளை வழங்குவார். 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா மற்றும் உயர் அதிகாரிகள் இரண்டு நாட்களும் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
சிறந்த மாநிலம், மாவட்டம், கிராமப் பஞ்சாயத்து, ஆராய்ச்சி/ புதுமை/ புதிய தொழில்நுட்பம், காட்சி நிகழ்ச்சி செய்தித்தாள் உள்ளிட்ட மொத்தம் 16 பிரிவுகளில் 98 விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
முழுவதும் மெய்நிகர் வாயிலாக நடைபெறும் இந்த விழாவை @mowrrdgr என்னும் முகநூல் பக்கத்தில் நேரலையாகக் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670679
(Release ID: 1670945)
Visitor Counter : 121