வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து போதுமான அளவு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்; உலக நாடுகளுக்கு மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 27 OCT 2020 7:25PM by PIB Chennai

சரியான நேரத்தில், அனைவருக்கும் சமமான மற்றும் போதுமான அளவு கொவிட்-19 தடுப்பு மருந்துகள் மலிவான விலையில் கிடைப்பதை உலக சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு.பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் பங்கேற்ற இணைய வழி கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  மருந்துகளை உற்பத்தி செய்வதில் போதுமான வசதிகள் இல்லாத நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா முன் வைத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். இது குறித்து முன்னதாக முடிவெடுக்க முடியாவிட்டாலும், வரும் 2021 ஜூன் மாதம் நடைபெற உள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கருத்தரங்கில் இந்த முன்மொழிவுக்கு பிற நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்றானது உலகளாவிய பொருளாதார, வர்த்தக சமநிலையின்மை மற்றும் உள்ளார்ந்த பலவீனங்களை உருவாக்கியிருப்பதாக திரு.பியூஷ் கோயல் கூறினார். உலக வர்த்தக முறையில் நிலவும் சமநிலையற்ற தன்மை மற்றும் ஆரோக்கியமற்ற தன்மையை எப்படி சரி செய்வது என்பது குறித்த நீண்டகால திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும், கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள உடனடி சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதே காலத்தின் தேவை என்றும் திரு கோயல் வலியுறுத்தினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667937

******

(Release ID: 1667937)


(Release ID: 1668057) Visitor Counter : 166