நிதி அமைச்சகம்

வரி ஏய்ப்பு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் வருமானவரித்துறை சோதனை

Posted On: 22 OCT 2020 10:30PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் செயல்படும் பிரபல குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் தொழில், கைவினைப் பொருட்கள், கார்பட் விற்பனை உட்பட பல தொழில்களை நடத்தி வருகிறது.  இந்த குழுமம், தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கு காட்டாமல் இருந்துவந்தது. இதையடுத்து இந்த குழுமத்துக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் உள்ள 15 அலுவலகங்கள் மற்றும் வீடுகள், தில்லியில் உள்ள ஒரு கட்டிடம் ஆகியவற்றில்  வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ரூ.1.82 கோடி ரொக்கபணம், ரூ.74 லட்சம் மதிப்பில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.105 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் மற்றும் பணபரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த குழுமத்துக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் 75,000 சதுர அடியில் மிகப் பெரிய வணிக வளாளகம் உள்ளது. இங்கு ரூ.25 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், வருமானவரி கணக்கை, இந்த குழுமம் தாக்கல் செய்யவில்லை.

ஸ்ரீநகரில் 6 அடுக்குமாடி குடியிருப்புகளையும், இந்நிறுவனம் கட்டி வருகிறது. இவற்றில் 50 வீடுகள் அடங்கிய 2 அடுக்குமாடி குடியிருப்புகள் முடிவடைந்து விட்டன. ஆனால், இது குறித்தும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இத்திட்டத்தில் ரூ.20 கோடி, கணக்கில் காட்டப்படாத பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பள்ளி மற்றும் அறக்கட்டளை ஒன்றையும் இந்த குழுமம் நடத்துகிறது. இந்த அறக்கட்டளை வருமானவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.  இந்த அறக்கட்டளையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் பணம் எடுத்து, இதர தொழில்களுக்கும், குழுமத்தின் தனிப்பட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை, அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த குழுமம் நடத்தும் பள்ளியிலும் ரூ.10 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுமத்துக்கு 3 லாக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழுமத்தின் மொத்த சொத்துக்கள், மதிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த குழுமத்தின் மொத்த மதிப்புகளை மதிப்பீடு செய்த இன்ஜினியரிங் நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளாக சொத்து மதிப்பீடு செய்ததற்கு, ரூ.4 கோடி கட்டணம் பெற்றுள்ளது. குழுமத்தின் சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து ஜம்மு & காஷ்மீர் வங்கியில் அதிகளவு கடன் பெறும் வகையில் இந்த சொத்தக்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. பல கடன்கள், வராக் கடன்களாக மாறியுள்ளன. இந்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குழுமத்தின் சொத்து மதிப்பீடு செய்த, இன்ஜினியரிங் நிறுவனமும்வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வருமானவரித்துறை மேலும் விசாரணை நடத்திவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666940

******

(Release ID: 1666940)



(Release ID: 1666964) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Hindi