ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளித் தொழிலில் கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, விசைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நெசவாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள்

Posted On: 22 SEP 2020 2:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஜவுளி அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானிபின்வரும் தகவல்களை அளித்தார்.  

'இந்திய பட்டு தொழிலில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள்' என்னும் தலைப்பில் ஆய்வு ஒன்றை அரசு நடத்தியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளை இந்த துறை சந்தித்திருந்தாலும் தற்போது பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகிறது

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளின் நலனுக்காகவும், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கான சந்தையை விரிவுபடுத்தவும் அரசு மின் சந்தை மூலம் அவர்களின் பொருட்களை நேரடியாக அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கும் வசதியை அரசு அளித்துள்ளது.

கைத்தறி பொருட்களின் மின் சந்தைப்படுத்துதலை ஊக்கப்படுத்துவதற்காக கொள்கை கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தை விளம்பரப்படுத்துவதற்காக #Vocal4handmade என்னும் சமூக ஊடக முன்னெடுப்பை அரசு எடுத்தது. இந்த சமூக ஊடக பிரச்சாரம் இந்திய கைத்தறி பொருட்களுக்கான ஆர்வத்தை அதிகப்படுத்தியது தெரியவந்துள்ளது.

நெசவாளர்களின் கைகளில் பணம் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களின் பொருட்களை மாநில கைத்தறி மற்றும் இதர நிறுவனங்கள் வாங்க அறிவுறுத்துமாறு முதல்வர்களை மத்திய ஜவுளி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விசைத்தறி மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக முதலீட்டு நிதியம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 24.50 கோடியும், இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியின் பங்களிப்பாக ரூபாய் 10.50 கோடியும் இந்த நிகழ்வுக்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் என்னும் கடன் சார்ந்த திட்டத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட ஜவுளித் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலீட்டை ஈர்த்தல், உற்பத்தித் திறன் பெருக்குதல், தரம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதி ஆதரவு ஆகியவற்றுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேக் இன் இந்தியாவின் மூலம் உற்பத்திகளைப் பெருக்குவதும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் லட்சியங்கள் ஆகும்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் சிறப்பு தொகுப்பை தவிர, நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கொவிட் பெருந்தொற்றின் காரணமாக, கண்காட்சிகள் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்த முடியாத காரணத்தினால், நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காக இணையவழி நிகழ்ச்சிகளுக்கு அரசு ஊக்கம் அளித்து வருகிறது.

இதைத் தவிர, தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான தொகுப்புகள், கைத்தறி சந்தைப்படுத்துதல் உதவி, நெசவாளர்களுக்கான முத்ரா திட்டம், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, உள்ளிட்டவற்றையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

*******************


(Release ID: 1657826)