விண்வெளித்துறை

பூமியின் சுற்றுவட்ட பாதையில் 32 புவி கண்காணிப்பு சென்சார் கருவிகள்: மத்திய அமைச்சர் திரு. ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 17 SEP 2020 5:09PM by PIB Chennai

மத்தியப் பணியாளர் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

 

5 புவி கண்காணிப்பு செயற்கை கோள்கள், 5 தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டில் உள்ளன. இதில் உள்ள 32 அதிநவீன புவி கண்காணிப்பு சென்சார் கருவிகள் நமக்கு தேவையான தகவல்களை அளித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட வெள்ளம், புயல், காட்டுத் தீ போன்ற இயற்கை பேரிடரின் போது, இவற்றில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன.  புவி அமைப்பு, தொலை உணர்வு, வானிலை, கடல்சார்  தொடர்பான  2,51,000 முக்கிய தகவல்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய செயற்கை கோள்களில், 47 செயற்கை கோள்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. அவற்றின் ஆயுள் முடிந்து விட்டது.

விண்வெளித்துறையின் கீழ் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அதிகார மையத்தை (INSPACe) மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையினரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மத்திய அரசின் இந்த முடிவு, விஞ்ஞானிகளிடம் விளக்கப்பட்டது. அவர்களும் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.  சீர்திருத்தம் செய்யப்பட்ட விண்வெளித்துறையில், புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் (NSIL) ராக்கெட்கள், செயற்கை கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தும். விண்வெளி சேவைகளையும் வழங்கும்.

விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள 500-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இஸ்ரோவுடன் இணைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்கள் தயாரிப்புக்க தேவையான பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக்  கருவிகளை வழங்கும்.



(Release ID: 1655757) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Punjabi