வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

வீட்டுவசதித் திட்டம், பிணையில்லாக் கடன், கட்டுமானத் திட்டங்கள், காற்று மாசு கட்டுப்படுத்துதல் குறித்த அறிவிப்புகள்

Posted On: 16 SEP 2020 6:58PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

 

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) துணைத் திட்டமான கட்டுபடியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்கள் திட்டம், நகர்ப்புற இடம் பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்காக 2020 ஜூலை 31 அன்று தொடங்கப்பட்டது.

 

மார்ச் 2020 வரை இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடாக ரூ 600 கோடி உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரைவு ஒப்பந்தங்கள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதுத்துறை / தனியார் துறை நிறுவனங்களை தங்களது சொந்த நிலங்களில் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்துவதற்கான விருப்ப கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 10,000 வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. மொத்தம் 1159763 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 406835 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 102616 பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 36069 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11272 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1488 பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவுரைகளை அனுப்பியுள்ளது. அதில், இயற்கைப் பேரிடர் போன்ற கொவிட்-19 தொற்று, ரியல் எஸ்டேட் திட்டங்களின் வழக்கமான பணிகளை கடுமையாக பாதித்துள்ளதால், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பதிவு காலத்தையும் 6 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கான ரூ 10,000 கோடி சிறப்பு மறுகடன் வசதியும், வங்கிசார கடன் நிறுவனங்களுக்கான ரூ 45,000 கோடி பகுதி கடன் உத்தரவாத திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் அதே சமயத்தில், வீடு வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது. கட்டுபடியாகக்கூடிய மற்றும் மத்திய பிரிவினருக்கான வீடுகளை கட்டி முடிப்பதற்காக சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அழுத்தத்தில் உள்ள வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதி உதவி கிடைக்கும்.

 

காற்று மாசைத் தடுப்பதற்காக நீண்டகால தேசிய அளவிலான உத்தி வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள காற்று மாசு 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

விரிவான தகவல்களுக்கு கீழ்க் காணும் ஆங்கில செய்திக் குறிப்புக்களைப் பார்க்கவும் :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1655247

                                      ------


(Release ID: 1655591) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Marathi , Manipuri