ஜல்சக்தி அமைச்சகம்
பிரிவு சார்ந்த பங்குதாரர்களுடன் இணைந்து தேசிய ஜல் ஜீவன் இயக்கம் செயல்படும்
Posted On:
27 AUG 2020 7:50PM by PIB Chennai
பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தபடி ஜல் ஜீவன் இயக்கமானது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் நோக்கமானது 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புத் தருவதே ஆகும். ஜல் ஜீவன் இயக்கமானது காலக்கெடுவுடன் கூடிய இயக்க அடிப்படையிலான தனிநபர் வீட்டு நிலையில் சேவை வழங்குவதை கவனத்தில் கொள்கின்ற திட்டம் ஆகும். அதாவது போதுமான அளவிலும், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலும் தொடர்ச்சியாக மற்றும் நீண்டகால அடிப்படையில் குடிநீர் வழங்கும் சேவையை இந்தத் திட்டம் செயல்படுத்துகிறது. நீர் ஆதாரங்கள் குறைந்து வருவது, நீரின் தரம் குறித்த பிரச்சனைகள் அதிகரித்து வருவது, கிராமத்துக்குள் உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமை, மோசமான இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிலைமை, மூலவளங்களின் திறன் போதாமை, பல்வேறு பிரிவுகளில் இருந்து எழும் நீரின் தேவைகள் முதலான பிரச்சனைகளை ஒருங்கிணைந்த முழுமையான முறையில் தீர்த்து வைப்பதற்கு இந்த இயக்கம் திட்டமிட்டு உள்ளது.
மக்களுடைய வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியமான நோக்கம் ஆகும். பௌதீக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மட்டுமே இயக்கத்தின் நோக்கம் அல்ல. மாறாக ஜல் ஜீவன் மிஷனை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைந்து செயல்படுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது. அதன்படி ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையானது பிரிவு சார்ந்த பங்குதாரராக இந்த இயக்கத்தோடு இணைந்து நெருங்கி பணியாற்றுவதற்கு அறக்கட்டளைகள், அறங்காவல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் முதலானவை ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம், இயற்கை மூலவளங்கள் நிர்வாகம், சமுதாயப் பணியில் மக்களை ஈடுபடுத்துதல், திறன் கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி, உடல்நலம், பழங்குடியினர் மேம்பாடு, பாலினம் மற்றும் சமத்துவம் முதலான பிரிவுகளில் அதிக அளவிலான மக்களை சென்றடையும் வகையிலும், குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஏற்கனவே பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற நிறுவனங்கள் ஜல் ஜீவன் இயக்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள அமைப்புகள் இயக்கத்தின் பரிசீலனைக்கு தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் 16-9-2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை https://jalshakti-ddws.gov.in/. என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
********
(Release ID: 1649165)
Visitor Counter : 143