சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் வளர்ப்பைக் கண்காணிப்பதற்காக ”ஹரித் பாத்” என்ற மொபைல் செயலியை என்.ஹெச்.ஏ.ஐ அறிமுகப்படுத்தி உள்ளது; ஆர்ஓ / பிடி / நிபுணர்களுக்கு பயனாளர் ஐடி உருவாக்குவது தொடங்கப்பட்டு உள்ளது; இதுவரை செயலியைப் பயன்படுத்தி 7800 மரங்களுக்கு ஜியோ-டேக் செய்யப்பட்டு உள்ளது.
Posted On:
21 AUG 2020 4:50PM by PIB Chennai
சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), ”ஹரித் பாத்” என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. அனைத்து மரம் வளர்ப்புத் திட்டங்களின் கீழ் ஒவ்வொரு மரத்திற்குமான இருப்பிடம், வளர்ச்சி, தாவர வகையின் விவரங்கள், பராமரிப்பு நடவடிக்கைகள், ஒவ்வொரு கள அலுவலகத்துக்குமான இலக்குகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக இந்தச் செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை இன்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துரை அமைச்சர் திரு நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.
நாட்டிற்கு 25 ஆண்டு காலம் ஆற்றிய சேவையைக் கொண்டாடும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாடு முழுவதும் மரம் நடும் முயற்சியாக ”ஹரித் பாரத் சங்கல்ப்” என்ற திட்டத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது என்று ஆணையத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்ற தனது பொறுப்புடைமையின் காரணமாக இந்த மரம் நடும் முயற்சியை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்தப் புதிய முயற்சியின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது 21 ஜுலை 2020 முதல் 15 ஆகஸ்ட் 2020 வரை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் 25 நாட்களில் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை இந்த முயற்சியோடு சேர்த்து மொத்தமாக 35.22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
செயலியைத் தொடங்கிய உடனேயே ஆணையமானது 150க்கும் மேலான ஆர்ஓ / பிடி / தோட்டக்கலை நிபுணர்களுக்கு பயனாளர் ஐ.டி-களை உருவாக்கும் பணியைத் தொடங்கிவிட்டது. இது தவிர சுமார் 7,800 தாவரங்கள் செயலியைப் பயன்படுத்தி ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது நீடித்த மரம் வளர்ப்பு முயற்சிக்கு திட்டமிட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் ஓரம் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கு என்பது தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தும் போது வெட்டியே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள மரங்களை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் நடும் பணிக்கு ஆணையம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மரம் நட வேண்டிய நெடுஞ்சாலை ஓரங்களை ஆணையம் அடையாளம் கண்டுள்ளதோடு இந்தச் சாலை ஓரங்களில் ஏற்கனவே நடப்பட்டுள்ள அனைத்து மரக்கன்றுகள் மற்றும் நடப்படவுள்ள மரக்கன்றுகள் குறித்த தரவுத்தொகுப்பை உருவாக்கி வருகிறது. ஹரித் பாத் மொபைல் செயலியின் அறிமுகம் என்பது நாடு முழுவதும் பசுமை நெடுஞ்சாலைகள் உருவாக்கத்திற்கு மேலும் உதவுவதாக அமையும்.
-------
(Release ID: 1647699)
Visitor Counter : 360