தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு கடலுக்கடியில் கேபிள் தொடர்பு வசதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


அந்தமான் நிகோபர் தீவுகளில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதாக இந்தத் தொடர்பு வசதி அமையும் என பிரதமர் கருத்து

தொழில் செய்யும் சூழலை எளிதாக்குவது மற்றும் கடல்சார் சேமிப்புக் கிடங்கு வசதியை எளிமைப்படுத்தலில் அரசு கவனம் செலுத்துகிறது: பிரதமர்

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியின் மையமாக அந்தமான் நிகோபர் தீவுகள் மாறவுள்ளது: பிரதமர்

சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் முக்கியமான துறைமுக மையமாக அந்தமான் நிகோபர் தீவுகள் மாறவுள்ளது: பிரதமர்

Posted On: 10 AUG 2020 12:52PM by PIB Chennai

நாட்டின் பிரதானப் பகுதிகளை அந்தமான் நிகோபர் தீவுகளுடன் இணைக்கும் கடலடி கண்ணாடி இழை கேபிள் தொடர்பு வசதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத் திட்டத்திற்கு 2018 டிசம்பர் 30 ஆம் தேதி போர்ட்பிளேரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்தத் தகவல் தொடர்பு இணைப்பு வசதி காரணமாக, இந்தத் தீவுகள் பகுதியில் முடிவில்லாத அளவுக்கு வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் கூறினார். 2300 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடலுக்கடியில் கேபிள் அமைப்பது மற்றும் நிர்ணயித்த காலத்திற்கு முன்னதாகவே பணிகளை முடிப்பது ஆகியவை பாராட்டுக்கு உரியவை என்று அவர் கூறினார்.

சென்னையில் இருந்து போர்ட்பிளேர், போர்ட்பிளேரில் இருந்து லிட்டில் அந்தமான் மற்றும் போர்ட்பிளேரில் இருந்து ஸ்வராஜ் தீவு என முக்கிய தொடர்புகளில் இதற்கான சேவை இன்றைக்குத் தொடங்கி இருக்கிறது.

கடலுக்கு அடியில் மதிப்பீடு செய்தல், அங்கு அமைக்கும் கேபிளின் தரத்தை உறுதி செய்தல், அதற்கு விசேஷ வாகனங்கள் பயன்படுத்துதல் ஆகியவை எளிதான பணிகள் இல்லை என்ற நிலையில், 2300 கிலோமீட்டர் நீளத்துக்கு கடலுக்கு அடியில் கேபிள் அமைத்திருப்பதைப் பிரதமர் பாராட்டினார். பேரலைகள், சூறாவளிகள் மற்றும் பருவமழைகள் ஆகிய சவால்களை எதிர்கொண்டு, கொரோனா பாதிப்புச் சூழ்நிலையில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு இந்தப் பணி முடிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு இதற்கான தேவை இருந்து வந்தது. ஆனால், அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார். பெரிய சவால்கள் இருந்த போதிலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருப்பதில் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்தமான் நிகோபர் தீவு மக்களுக்கு நல்ல மற்றும் குறைந்த செலவிலான இணைப்பு வசதிகளை உருவாக்கித் தருவது அரசின் கடமையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இத் திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அந்தமான் நிகோபர் தீவுகள் டெல்லியில் இருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், பிரதானப் பகுதி மக்களின் இதயங்களில் இருந்து ரொம்பவும் விலகி இருக்கவில்லை என்பதையும் உறுதி செய்வதாக, இந்த கடலடி கேபிள் திட்டம் அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வை எளிதாக்குதல்

வாழ்வதை எளிதாக்குவதற்காக, அனைத்து குடிமக்களுக்கும், அனைத்துத் துறைகளிலும் நவீன வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டது என்று திரு. மோடி கூறினார். நாட்டின் பிற பகுதிகளுடன் அந்தமான் நிகோபர் தீவுகளை இணைக்கக் கூடிய இந்த கண்ணாடி இழைத் திட்டம், வாழ்வை எளிதாக்குவதில் அரசு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளின் வேகமான வளர்ச்சியில் அரசு முக்கியத்துவம் காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா மூலம் வாய்ப்புகள் அதிகரிப்பு

டிஜிட்டல் இந்தியாவின் அனைத்துப் பயன்களையும், அந்தமான் நிகோபர் பகுதி மக்கள் குறைந்த செலவில் மற்றும் நல்ல இணையத் தொடர்பு வசதியுடன் பெறுவதற்கு உதவி செய்வதாக கடலடி கேபிள் திட்டம் இருக்கும் என்று பிரதமர் கூறினார். குறிப்பாக இணையவழிக் கல்வி, இணைய வழி மருத்துவம், வங்கியியல் நடைமுறை, இணைய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியாவின் வர்த்தகத்தின் மையமாக இருந்து வருகிறது என்றும், பல ஆயிரம் ஆண்டுகளாக முக்கியமான அதிகார மையமாக இருந்து வருகிறது என்றும் கூறிய பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் - பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்புகளுக்கு அந்தமான் நிகோபர் முக்கியமான ஒரு மையமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய வர்த்தக உத்திகளில் இந்தியாவின் அனைத்துத் தீவுகளும் முக்கியமான பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

கிழக்கத்திய நாடுகளை ஈர்க்கும் வகையிலான செயல்பாடுகளை மையமாகக் கொண்ட கொள்கையில், கிழக்காசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளுடன் அந்தமான் நிகோபர் பலமான உறவுகள் கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு தீவு மேம்பாட்டு ஏஜென்சி உருவாக்கப்பட்டது என்பதை அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக அந்தமான் நிகோபர் தீவுகளில் நிறைவேற்றாமல் இருந்த திட்டங்கள், இப்போது வேகமாக நிறைவேற்றப்படுகின்றன என்பதை பிரதமர் தெரிவித்தார்.

அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்கள், நல்ல நிலம், வான்வழி மற்றும் நீர்வழித் தடங்கள்

அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள், அந்தமான் நிகோபரின் 12 தீவுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலை மார்க்கமாக, வான்வழியாக, நீர்வழித்தடம் மூலமாக தொடர்புகளை மேம்படுத்துவதுடன்,  நல்ல இன்டர்நெட் வசதி மற்றும் செல்போன் இன்டர்நெட் வசதி கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகப் பிரதமர் கூறினார்.

வடக்கு மற்றும் அந்தமான் மையப் பகுதியுடன் சாலை மார்க்கமாக தொடர்பை மேம்படுத்துவதற்கு நடைபெறும் இரண்டு பாலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 4-இன் பணிகள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

1200 பயணிகள் திறனைக் கையாளும் அளவுக்கு போர்ட்பிளேர் விமான நிலையத்தின் தரம் உயர்த்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். அத்துடன் திக்லிபூர், கார் நிகோபர் மற்றும் கேம்ப்பல்- வளைகுடா விமான நிலையங்களும் செயல்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்வராஜ் ட்வீப், ஷாஹீத் ட்வீப், மற்றும் லாங் ஐலேண்ட் பயணிகள் முனையத்துடன் நீர் மேல் மிதக்கும் விமான நிலையம் போன்ற படகுத் துறை விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

கொச்சி கப்பல் கட்டும் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டு வரும் 4 கப்பல்கள்,  தீவுகளுக்கும் பிரதானப் பகுதிக்கும் இடையில் நீர்வழித் தடத்தில் இணைப்பை மேம்படுத்துவதற்காக அளிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

துறைமுகம் சார்ந்த வளர்ச்சி

உலகின் பல துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதால், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மையமாக அந்தமான் நிகோபர் உருவாகும் என்று பிரதமர் கூறினார்.

துறைமுகங்களின் இணைப்பு வசதி நல்ல நிலையில் இருக்கும் நாட்டில் 21வது நூற்றாண்டில் வர்த்தகம் உத்வேகம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்சார்பு என்ற கொள்கையை முன்வைத்து, உலக அளவிலான வழங்கல் சங்கிலித் தொடரில் இந்தியா முக்கிய பங்காற்றி வரும் வேளையில், நமது நீர்வழித் தடங்கள் மற்றும் துறைமுகங்களின் இணைப்புகளைப் பலப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று அவர் கூறினார். துறைமுகக் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் உள்ள சட்ட சிக்கல்களும் தொடர்ந்து களையப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச கடல்சார் வர்த்தகம்

கடல் மார்க்கத்தில் தொழில் செய்வதை எளிதாக்குதல் மற்றும் கடல்சார் சேமிப்புக் கிடங்கு தொழிலை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள்பகுதி துறைமுகப் பணிகள் வேகமாக நடைபெறுவது பற்றியும், கிரேட் நிகோபரில் கப்பல்களுக்கு இடையில் சரக்கு மாற்றம் செய்யும் பணிகள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  பெரிய கப்பல்களை அங்கு நிறுத்தி வைக்க இது உதவிகரமாக இருக்கும். மேலும் கடல்சார் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க உதவியாக இருப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

அந்தமான் நிகோபரில் நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவதால்,  மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு, கடல்பாசி வேளாண்மை போன்ற நீலப் பொருளாதார செயல்பாடுகள், இந்தத் தீவுகள் பகுதியில் அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக அந்தமான் நிகோபருக்குப் புதிய வசதிகள் கிடைப்பது மட்டுமின்றி, உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்க உதவுவதாகவும் இருக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

****
 



(Release ID: 1644851) Visitor Counter : 255