இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவன (NSNIS) பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டத்தின் மறுவடிவமைப்பு மற்றும் தேசிய விளையாட்டு பயிற்சி மைய (NCSC) ஆசிரியர் அமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டன

Posted On: 06 AUG 2020 6:13PM by PIB Chennai
  • விளையாட்டு சூழலியலை நாட்டில் ஏற்படுத்துவதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று விளையாட்டுப் பயிற்சி ஆகும். அடிப்படை மற்றும் உயரிய அளவில் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கவும், வலுப்படுத்தவும் சில முக்கிய முடிவுகளை இந்திய விளையாட்டு ஆணையத்தின் 27-வது கல்விக் குழு சமீபத்தில் நடைபெற்ற அதன் கூட்டத்தில் எடுத்தது.

 

தேசிய விளையாட்டுப் பயிற்சி மையத்தில் (NCSC) ஏற்கனவே உள்ள அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், விளையாட்டு வீரர்களின் மாறிக்கொண்டு வரும் தேவைகளுக்கேற்ப பயிற்சி அளிப்பவர்களுக்கு புதிய திறன்களை அளிப்பதன் மூலமும், விளையாட்டில் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

1) உலகளாவிய விளையாட்டு சூழலியலின் மாறி வரும் அமைப்பை கருத்தில் கொண்டும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்க, இந்திய பயிற்சியாளர்கள் திறன் பெற்றுள்ளார்கள் என்பதை உறுதி செய்யவும், பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தின் (NSNIS) முன்னணி படிப்பான விளையாட்டு பயிற்சி பட்டயப் படிப்பின் பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை விளையாட்டுப் பிரிவுகளின் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களோடு நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டது. கொவிட் பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு பட்டயப் படிப்பின் முதல் செமஸ்டரை இணைய வழியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

 

2) பாட்டியாலா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய விளையாட்டு நிறுவனங்களில் ஆசிரியர்களின் தரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிபுணர்களைக் கொண்ட ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் மூலம் பயிற்சி பெறுபவர்கள் பலன் பெற, திறன்மிக்க நிபுணர்களின் குழுவை உருவாக்குவதற்கு ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களை ஆய்வு செய்து, புதிய மற்றும் வருங்கால ஆசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான பரிந்துரையை இந்தக் குழு அளிக்கும். குறிப்பாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணைய வழி கற்பித்தல் முறையை இது கருத்தில் கொள்ளும்.

 

3) தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடிப்படை நிலை மற்றும் மேம்பாட்டு பயிற்சியாளர்களுக்கான ஆறு வாரப் பயிற்சியாளர் கல்வித் திட்ட சான்றிதழ் படிப்பை இணைய வழியில் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது

*****



(Release ID: 1644740) Visitor Counter : 108