சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 பெருந்தொற்றால் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள மாவட்டங்களுடன் இணைந்து செயல்படுகிறது சுகாதாரத் துறை அமைச்சகம்

Posted On: 07 AUG 2020 8:52PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான சராசரியை விட அதிக உயிரிழப்பு பதிவாகும் மாவட்டங்கள் கவலை அளிக்கின்றன. கோவிட்-19 பெருந்தொற்றை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தவும், கையாளவும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, சுகாதாரத் துறைச் செயலாளர் திரு.ராஜேஷ் பூஷண் தலைமையில் காணொளி மூலம் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராயவும், உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

அதிக உயிரிழப்பு ஏற்படும் 16 மாவட்டங்கள், 4 மாநிலங்களில் உள்ளன. அதாவது, குஜராத்தில் அகமதாபாத், சூரத்; கர்நாடகாவில் பெலகாவி, பெங்களுரு நகர்ப்புறம், கலபுரகி, உடுப்பி; தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்; தெலங்கானாவில் ஹைதராபாத், மெச்சல்-மல்கஜ்கிரி ஆகிய மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதோடு, இந்தியாவில் மருத்துவ சிகிச்சையில் இருப்போரில் 17 சதவீதம் பேர் உள்ளனர், தினசரி அதிக அளவில் புதிதாக நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர், 10 லட்சம் பேரில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை விகிதமும் குறைவாக உள்ளது, உறுதிப்படுத்தப்படுவதில் அதிக சதவீதம் பதிவாகிறது. இந்தக் கூட்டத்தில், 4 மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்கள், மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இந்த வழிமுறைகளை,  கோவிட்-19 நோயாளிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் பிற தடுக்கக் கூடிய உயிரிழப்பை, குறிப்பாக இணை நோய் இருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் உயிரிழப்பைக் குறைப்பதற்காக சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



(Release ID: 1644648) Visitor Counter : 204