குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பால கங்காதர திலகர் மற்றும் சந்திர சேகர் ஆசாத் பிறந்தநாளில் குடியரசு துணைத்தலைவர் புகழாரம்

Posted On: 23 JUL 2020 3:36PM by PIB Chennai

பள்ளிப் பாடப்புத்தகங்களில் தியாகம், நாட்டுப்பற்று, வீரம் மிக்க தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறுகளை இளம் தலைமுறையினர் தெரிந்து கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் வகையில் முக்கிய கவனம் செலுத்திச் சேர்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இரு பெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பால கங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த தினத்தை ஒட்டி முகநூலில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், அவர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த மாபெரும் நாட்டைப் பற்றிய அவர்களது கனவை நனவாக்க மக்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் நினைவை வெறுமனே செய்திகளாகத் தராமல், அவர்களைப் போற்றும் வரலாறுகளை அளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

லோகமான்ய திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் விடுதலைப் போராட்டத்தில் அளித்த பங்களிப்பை விளக்கியுள்ள குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வடிவமைத்ததில் இரு பெரும் தலைவர்களும் முன்னோடியாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் திகழ்ந்ததாக கூறியுள்ளார்.

“அவர்களது வாழ்க்கை வரலாற்றையும், விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்கு பற்றியும் இக்கால இளைஞர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்’’ , என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘சுயராஜ்யம்’ என்பதை முதன்முதலாகக் கூறி, அதற்காக வாதாடியும், போராடியும் வந்த பால கங்காதர திலகரை காலனி ஆதிக்க சக்திகள், ‘இந்தியாவின் அமைதியின்மையின் தந்தை’ என்று வர்ணித்து வந்ததாக திரு. நாயுடு குறிப்பிட்டுள்ளார். சிறந்த கல்வியாளர், கணித மேதை, தத்துவ ஞானி, பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தீவிர தேசியவாதி என அவரைப் பாராட்டியுள்ளார்.

“அவரது புகழ்பெற்ற பொன்மொழியான “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்’’ என்பது , இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் பிந்தைய புரட்சியாளர்களுக்கு, விடுக்கப்பட்ட உன்னதமான அழைப்பாக இருந்தது’’ என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய எழுச்சியைத் தூண்டிவிட்டு, அதனை கற்றறிந்தவர்களின் வட்டாரத்தையும் தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்கும் கோலாகலமான விநாய உற்சவத்தின் மூலம் அதனைக் கொண்டு சென்றவர் லோகமான்ய திலகர் என்று குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

திலகர் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த, கேசரி, மராத்தா என்ற இரண்டு வாரப்பத்திரிகைகள் மக்களின் அரசியல் மன உணர்ச்சியைத் தட்டி எழுப்பிதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1884-இல் தொடங்கப்பட்ட தக்காணக் கல்விச் சபையின் நிறுவனர்களில் ஒருவராக லோகமான்யர் இருந்ததைக் குறிப்பிட்டுள்ள திரு. நாயுடு, ஜனநாயகத்தின் எண்ணங்களையும், விடுதலைச் சிந்தனைகளையும் பரப்ப கல்வி மிகப்பெரும் சக்தி என அவர் நம்பினார் என்று கூறியுள்ளார். “மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்’’ என குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

சந்திரசேகர் ஆசாத்தின் நாட்டுப்பற்றின் எழுச்சி, வீரம், தன்னலமின்மை ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள குடியரசுத் துணைத்தலைவர், இந்திய தேசிய இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே ஈர்க்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

ஆசாத்தின் மிகச்சிறந்த தலைமைப்பண்புத் திறன்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான திறமைகளைப் புகழ்ந்துள்ள திரு. நாயுடு, அவரது இந்த ஆளுமைத்திறன், இந்துஸ்தான் குடியரசு சங்கத்தை இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் என மாற்றி வலுப்படுத்த உதவியாகத் தெரிவித்துள்ளார்.

பகத்சிங் உள்ளிட்ட ஏராளமான இளம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு குருவாகவும், தத்துவஞானியாகவும் , வழிகாட்டியாகவும் ஆசாத் திகழ்ந்தார் என்று கூறியுள்ள குடியரசுத் துணைத் தலைவர், 25 வயதில் விடுதலை இயக்கத்தின் மிகச்சிறந்த உத்வேகம் கொண்ட இளம் தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

***********



(Release ID: 1640815) Visitor Counter : 688