ஜல்சக்தி அமைச்சகம்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர், மணிப்பூர் முதலமைச்சருடன் காணொளி வாயிலாக விவாதம்

Posted On: 09 JUL 2020 3:31PM by PIB Chennai

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர செகாவத், மணிப்பூரில் நீர் ஆதார இயக்கத்தை (ஜீவன் மிஷன்) அமல்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து அந்த மாநில முதலமைச்சர் திரு.என். பிரேன் சிங்குடன் காணொளி மூலம் விவாதித்தார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன்  கடந்த மூன்று மாதங்களாக நடத்திய கலந்தாய்வு மூலம் நீர்வளத்துறை அமைச்சகத்தின் குடிநீர்  மற்றும் சுகாதாரத்துறை, மேற்கொண்ட விரிவான பயிற்சியின் தொடர்ச்சி இதுவாகும். இதில், கிராமபுரங்களில்  வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குவது குறித்து மாநிலங்களில் குடிநீர் விநியோகத் திட்டங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

2022-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்தார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படும்; இதன் மூலம் ஏழை-எளிய மற்றும் வருமானத்தின் விளிம்பில் உள்ள மக்களும் அவர்களது வீடுகளில்  குடிநீர்க் குழாய் இணைப்பைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டில் தேசிய இலக்கை எட்ட இருக்கும் நிலையில், 2021-22 நிதி ஆண்டில் 100 சதவிகித வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்க மணிப்பூர் திட்டமிட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டின் மூலம், ஒவவொரு கிராமப்புறக் குடியிருப்புக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்குவது என்ற லட்சிய இலக்கை எட்டுவதில், வடகிழக்கில் முதல் மாநிலமாக மணிப்பூர் திகழ்கிறது.

மணிப்பூரில் உள்ள 4.51 லட்சம் கிராமப்புற வீடுகளில், 0.32 லட்சம் (7.17%) வீடுகளுக்கு செயலுக்கு வந்துள்ள குடிநீர்க் குழாய் இணைப்பு (எஃப்.எச்.டி.சி) வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய  4.19 லட்சம் வீடுகளில் 2020-21 ஆண்டில் 2 லட்சம் வீடுகளில் குடிநீர்க் குழாய் இணைப்புகளை வழங்க மணிப்பூர் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஒரு மாவட்டம் 15 வட்டங்கள் மற்றும் 1275 கிராமங்கள் என 100 சதவிகித  குடிநீர்க் குழாய் இணைப்புகளை வழங்க இந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது.

                                             ------


(Release ID: 1637682)