பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை
Posted On:
01 JUL 2020 5:55PM by PIB Chennai
இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு, இந்த ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி வாரம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கடுமையாக குறைந்த நிலையில், பொதுமுடக்கத்துக்கு முந்தைய அளவுக்கு ஜூன் 2020-ல் திரும்பி வருகிறது. ஜூன் மாதத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் (இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன்) விற்பனை அதிகரித்துள்ளது.
உலகில் பெட்ரோலியத்தை அதிக அளவில் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பிறகு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக தொடங்கப்பட்டதாலும், தொழில் துறை நடவடிக்கைகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வு தொடங்கியுள்ளது. இதன்மூலம், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்த பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டில் (13.4 மில்லியன் மெட்ரிக் டன்) 88% அளவுக்கு 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் (11.8 மில்லியன் மெட்ரிக் டன்) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அனைத்துப் பிரிவு பொருளாதார நடவடிக்கைகளிலும் உற்பத்தி/ தொழில் துறை/ போக்குவரத்து நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது வெளிப்படுகிறது.
தொழில் துறைக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள்களான சல்பர், பெட்கோக், நாப்தா ஆகியவற்றின் தேவை முறையே, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த அளவில் 89.3%, 118% மற்றும் 80.7%-ஆக உள்ளது. அதேநேரத்தில், கப்பல்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளின் தேவை 138.5%-ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோலிய விற்பனை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்திலும் உள்ள கச்சா எண்ணெய் அளவு ஏற்கனவே 85%-ஐ கடந்துள்ளது. இது 2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மிகவும் குறைந்த அளவாக 55%-ஆக இருந்தது.
தொழில் துறை அடிப்படையில், ஜூன் 2020-ல் பெட்ரோலின் பயன்பாடு, கடந்த ஆண்டு இருந்த அளவில் 85%-ஐ அடைந்துள்ளது (ஜூன் 2019-ல் 2.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், ஜூன் 2020-ல் 2.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது). இதேபோல, டீசலின் பயன்பாடு கடந்த ஆண்டின் அளவில் 82%-ஐ அடைந்தது (ஜூன் 2019-ல் 6.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், ஜூன் 2020-ல் 5.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது).
உரிய காலத்தில் வரத் தொடங்கிய பருவமழை மற்றும் கரீப் பருவ காலத்தில் வேளாண் நடவடிக்கைகள் வேகமெடுத்தது ஆகியவற்றின் மூலம், டீசல் நுகர்வு, ஏப்ரல் 2020-ல் இருந்த அளவைவிட ஜூன் மாதத்தில் 96% அதிகரித்துள்ளது (ஏப்ரல் 2020-ல் 2.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த டீசல் நுகர்வு, ஜூன் 2020-ல் 5.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது).
சமையல் எரிவாயு-வின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் 2019-ஐ விட, ஜூன் 2020-ல் 16.6% அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளை 33% பயணிகளுடன் இயக்க அனுமதி அளித்தது மற்றும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ், சர்வதேச நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வருவதற்கான விமானங்களை இயக்கியது ஆகியவற்றின் மூலம், விமான எரிபொருளின் பயன்பாடு, கடந்த ஏப்ரல் மாத அளவைவிட 4 மடங்கு அதிகரித்துள்ளது. (ஏப்ரல் 2020-ல் 52 டிஎம்டி-யாக இருந்த விமான எரிபொருள் பயன்பாடு, ஜூன் 2020-ல் 201 டிஎம்டி-யாக அதிகரித்துள்ளது).
இதேபோல, மிகப்பெரும் சாலை கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் பிற்றுமின் பயன்பாடு, ஜூன் 2019-ஐவிட, ஜூன் 2020-ல் 32% அதிகரித்துள்ளது.
அனைத்து வகையான பெட்ரோலியப் பொருட்களின் ஒட்டுமொத்த பயன்பாடு, முந்தைய ஆண்டின் அளவில் ஏப்ரல் மாதத்தில் 49%-ஆக மட்டுமே இருந்த நிலையில் (ஏப்ரல் 2019-ல் 13.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், ஏப்ரல் 2020-ல் 6.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக குறைந்தது) ஜூன் 2020-ல் 88%-ஆக அதிகரித்தது (ஜூன் 2019-ல் 13.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், ஜூன் 2020-ல் 11.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது). பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்வு, பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது ஆகியவற்றின் மூலம், இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.
*****
(Release ID: 1635859)
Visitor Counter : 192