அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கார்பன் உற்பத்தி அதிகரிப்பது சென்னையில் அதிக அசாதாரணமான மழைப் பொழிவுக்கு வழிவகுக்கும்.

Posted On: 27 JUN 2020 6:45PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகளால் ஏற்படும் மரணங்களின் அதிகபட்ச சராசரியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எதிர்காலத்திலும் இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்காது, குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பிருக்காது என்று தெரிகிறது. சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் (..டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மாதிரி ஆய்வில், எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் தொடர்பான, அசௌகரியமான சூழ்நிலைகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

          கார்பன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சென்னைப் பகுதியில் அசாதாரணமான மழைப் பொழிவு நிகழ்வுகளுக்கு உகந்த சூழ்நிலைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் மழைப்பொழிவு நாளில், மழைப்பொழிவு இப்போதுள்ளதை விட 17.37 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2075 ஆம் ஆண்டுக்கு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தனிநபர் பசுமைக்குடில் வாயு உற்பத்தி (GHG) அதிகபட்ச ஆபத்து வரம்பில் இருக்கும் நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.

``அடர்வு அதிகரிப்பு மற்றும் இதுபோன்ற மழைப் பொழிவு நிகழ்வுகள் பூகோள ரீதியிலான பரவல் ஆகியவற்றால், தீவிர வெள்ளம் ஏற்படும். எதிர்காலத்தில் அதிக நாட்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம். அதனால் நகர மக்களுக்கு ஆபத்து, சேதாரம் அதிகமாகும் ஆபத்து உள்ளது'' என்று சென்னை ..டி.யின் முன்னோடி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சி. பாலாஜி தெரிவித்துள்ளார். மழைப் பொழிவின் அளவு 183.5%, 233.9%, மற்றும் 70.8%. அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. 2015 டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், தினசரி மழைப்பொழிவு உயர்வு இந்த அளவுக்கு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டிருப்பதுடன், அசாதாரண மழைப்பொழிவின் புவியியல் ரீதியிலான பரப்பு அதிகரிப்பதுடன், மழைப் பொழிவின் நாட்களும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது. தென்னிந்திய நகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, பெரும் வெள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் ஒரே ஒரு நிகழ்வு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதன் முடிவுகள் மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் ஏற்படுவது பற்றியது மட்டுமாக உள்ளன. ``பருவநிலை மாற்றம் காரணமாக அசாதாரண மழைப் பொழிவு ஏற்படுவது குறித்து அறிவியல்பூர்வமாக நம்பகத்தன்மையான எண்ணிக்கை சார்ந்த தகவல்களை உருவாக்க, சிறந்த முடிவுகளுக்கு வருவதற்கு, பருவநிலைக்கு முந்தைய மற்றும் பருவநிலைக்குப் பிந்தைய வெவ்வேறு பருவங்களில் ஏராளமான நேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்'' என்று டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். பருவநிலைகளுக்கு அப்பாற்பட்டு, அசாதாரண மழைப்பொழிவில் பெருங்கடல் பகுதிகளும் பெரிய பங்கு வகிக்கின்றன; இந்த கூட்டுக் காரணிகளை ஆய்வு செய்தால், இன்னும் துல்லியமான முடிவுகளை எட்ட முடியும்.

`கடலோரக் கட்டமைப்புகள் மற்றும் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ளும் செயல் திட்டங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள்' என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்டத்திற்காக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் SPLICE-பருவநிலை மாற்ற செயல் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. கணிப்புகளுக்காக வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்னறிவிப்பு (WRD) மாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் டாக்டர் பி. ஜோதீஷ்குமார், டாக்டர் பி.வி. கிரண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட விஷயங்கள் Current Science- இல் வெளியிடப் பட்டுள்ளன.

 



(Release ID: 1634829) Visitor Counter : 244


Read this release in: English , Urdu , Hindi